அனோஜனின் மன்னிப்பு கோர ஆளும்,எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் குழு விரைவில் சவூதி பயணம்
புலம்பெயர் அமைப்புகளும் தாங்கள் இயங்கும் நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, சிவராசாவை விடுவிப்பதற்கு இராஜதந்திர மற்றும் மனிதநேய ஆதரவைக் கோரியுள்ளன.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவிற்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மேன்முறையீட்டுக் கடிதம் ஒன்றை சவூதி அரேபிய மன்னரிடம் சமர்ப்பிக்க ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று விரைவில் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யவுள்ளது.
இந்த மேன்முறையீடு மனிதநேய அடிப்படையில் முன்வைக்கப்படவுள்ளது. இதனிடையே,சிவராசா சார்பாக மேன்முறையீடு ஒன்றைத் தாக்கல் செய்வதற்காக வெளிவிவகார அமைச்சு சவூதி அரேபியாவிலுள்ள சட்ட நிறுவனம் ஒன்றுடன் தொடர்புகொண்டுள்ளது. இந்த மேன்முறையீடு எதிர்வரும் மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட வேண்டும். சிவராசாவை விடுவிக்குமாறு பல சிவில் உரிமை அமைப்புகளும் மத அமைப்புகளும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
சிவராசாவிற்கு மன்னிப்பு மற்றும் விடுதலையைப் பெற்றுக்கொள்வதற்கான வழிகள் குறித்து விவாதிக்க அவசர சந்திப்பைக் கோரி இலங்கைத் தமிழரசுக்கட்சி ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ கடிதத்தை அனுப்பியுள்ளது. தமிழரசுக்கட்சி ஜனாதிபதியின் தலையீட்டைக் கோரியுள்ளதுடன், கிடைக்கக்கூடிய அனைத்து இராஜதந்திர வழிகளையும் விரைவாகப் பின்பற்றுவதன் அவசியத்தை தமிழரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சவூதி அரேபியாவிற்கு செல்லவுள்ள குழுவில் தமது கட்சியின் பிரதிநிதியாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவேந்திரன் கோடீஸ்வரனை தமிழரசுக்கட்சி நியமித்துள்ளது. இக்குழு தொடர்பான அறிவிப்பை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கட்சி வெளியிட்டிருந்தார்.
மேலும்,புலம்பெயர் அமைப்புகளும் தாங்கள் இயங்கும் நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, சிவராசாவை விடுவிப்பதற்கு இராஜதந்திர மற்றும் மனிதநேய ஆதரவைக் கோரியுள்ளன.
இலங்கை தேசிய சூரா கவுன்சில்,அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் இலங்கை முஸ்லிம் கவுன்சில் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளும் சவூதி மன்னரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.





