ஓட்டுநரற்ற பயணிகள் ட்ரோன் சேவை ஆரம்பம்
விரைவான பயணியர் போக்குவரத்து மற்றும் அவசர கால சேவைகளை தடையின்றி வழங்குவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையின் வான்வழிப்போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறையில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மின்சார சக்தியால் இயங்கும் ஓட்டுநரற்ற பயணிகள் ட்ரோன் சேவையின் முதலாவது உத்தியோகபூர்வ சோதனைப் பறப்பு 11-11-2026 அன்று கொழும்பு துறைமுக நகரில் நடைபெற்றது.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு நாட்டின் போக்குவரத்து துறையை நவீனமயமாக்குவதிலும் சுற்றுலாத் துறையை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்வதிலும் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் மின்சக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) பந்துல ஹேரத், EHang நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கொனர் சியா-ஹங் யாங் (Conor Chia-hung Yang) மற்றும் சீனத் தூதரகத்தின் பொருளாதார வர்த்தக ஆலோசகர் டாங் யண்டி (Tang Yandi) உள்ளிட்ட பல முக்கிய உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பிரத்யேக ஓடுபாதைகள் எதுவுமின்றி செங்குத்தாக மேலே எழும்பி, தரையிறங்கும் திறன் கொண்ட ‘eVTOL’ தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த ட்ரோன்கள், நாட்டின் சுற்றுலாத்துறையை வலுப்படுத்துவதையும், விரைவான பயணியர் போக்குவரத்து மற்றும் அவசர கால சேவைகளை தடையின்றி வழங்குவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இச்சோதனைப் பறப்பில் பயன்படுத்தப்பட்ட ‘E 216’ ரக ட்ரோன் இரு பயணிகள் பயணிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், 16 சுழலிகள் (Propellers), 12 சக்திவாய்ந்த பேட்டரித் தொகுதிகள் மற்றும் 3 அதிநவீன விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் (Flight-Control Systems) கூடிய கணினிமயமாக்கப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. மத்திய கட்டுப்பாட்டு மையத்திலிருந்து தொலைவிலிருந்து இயக்கப்படும் இந்த ட்ரோன்கள், பறப்பின் போது ஏதேனும் விபத்து அல்லது தொடர்பாடல் தடைகளோ ஏற்படும் பட்சத்தில், பயணிகள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தானாகவே பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவையாக தயாரித்து இயக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் அனுர கருணாதிலக்க, இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறையில் இதுவொரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என்றும், நாட்டின் சுற்றுலாத்துறையை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு ஆகும். மேலும், இது தற்போதைக்கு ஆராய்ச்சி / சோதனை மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட போதிலும், மிகவும் திருப்திகரமான வெற்றியைப் பெற்றுள்ளது.
ஆசியப் பிராந்தியத்தில் மற்ற நாடுகள் கூட இன்னும் எட்டாத ஒரு வளர்ச்சியை இலங்கை தற்போது அடைந்துள்ளது. இந்த நவீன தொழில்நுட்பமானது இலங்கையின் வான்வெளித்துறைக்கு ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைக்கும் என்றும் இது நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு பெரிய மாற்றமாக அமையும் என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு, உலகின் வளர்ந்த நாடுகள் பயன்படுத்தும் அதிநவீன தொழில்நுட்பங்களை இலங்கைக்குக் கொண்டுவருவதன் மூலம், அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு இணையான உள்கட்டமைப்பை உள்நாட்டிலும் கட்டியெழுப்ப முடியும் எனச் சுட்டிக்காட்டினார்





