அரச தோட்ட நிலங்களின் குத்தகை காலம் நீடிக்கப்படும்: ஜீவன் தொண்டமான்
பயிரிடப்படாத பெருந்தோட்ட நிலங்களைப் பெருந்தோட்டச் சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பகிர்ந்தளிப்பதாக உறுதியளித்திருந்ததையும் சுட்டிக்காட்டினோம்.
அரச தோட்ட நிலங்களின் குத்தகை காலம் நீடிக்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமக்கு தெரிவித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாரும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரச பெருந்தோட்டக்கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 117 ஹெக்டெயர், மக்கள் தோட்டப் அபிவிருத்திச் சபையின் கீழ் உள்ள 88 ஹெக்டெயர் மற்றும் எல்கடுவப் பிளான்டேஷன்ஸ் லிமிடெட்டுக்குச் சொந்தமான 42 ஹெக்டெயர் நிலங்களின் உரிமங்களை மாற்றுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் முன்வைத்த யோசனைக்கு எனது எதிர்ப்புக்களை உத்தியோக பூர்வமாக அறிவித்தோம்.
கடந்த தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தி தனது அட்டன் பிரகடனத்தில், பயிரிடப்படாத பெருந்தோட்ட நிலங்களைப் பெருந்தோட்டச் சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பகிர்ந்தளிப்பதாக உறுதியளித்திருந்ததையும் சுட்டிக்காட்டினோம்.
எவ்வாறாயினும், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, 3,000 ஏக்கருக்கும் அதிகமான பெருந்தோட்ட நிலங்களைத் தனியார் தரப்பினருக்கு மாற்றுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. மேற்படி மூன்று அரசுக்குச் சொந்தமான தோட்டங்களில் 7,00இற்கும்அதிகமான பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் இருக்கின்றனர்.
அந்த வகையில் மேற்படி நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் அங்கு பணிபுரியும் பெருந்தோட்ட மக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுடன் எத்தகைய கலந்தாலோசனைகளும் நடத்தப்படவில்லை. பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களுக்கு இந்த முன்மொழியப்பட்ட நடவடிக்கை குறித்து எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் கிடைக்கவில்லை.
பாராளுமன்றத்தில் வி.இராதாகிருஷ்ணன் எம்.பி.எழுப்பிய கேள்விக்கு சம்பந்தப்பட்ட பிரதி அமைச்சர் அளித்த பதிலானது போதுமானதாகவும் இல்லை, திருப்திகரமானதாகவும் இல்லை. இவ்வாறான நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து அரச தோட்டங்களின் குத்தகைக்காலம் நீடிக்கப்படுமென தெரிவித்துள்ளார் என்றார்.





