டிரான் அலஸ் உள்ளிட்டோரை கைது செய்வதை தடுத்து இடைக்காலத்தடை உத்தரவு
தனியார் பத்திரிகை நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உள்ளிட்ட தனியார் பத்திரிகை நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மற்றும் ஊழியர்களை கைது செய்வதைத் தடுத்து பொலிஸ் மாஅதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத்தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனியார் பத்திரிகை நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
வர்த்தக கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில், டிரான் அலஸ் உள்ளிட்ட தனியார் பத்திரிகை நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மற்றும் ஊழியர்களை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர் தரப்பினால் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எல்.பி.எல். கேசர லங்கா தனியார் நிறுவனத்திடமிருந்து காகிதங்களை கொள்வனவு செய்துள்ளதாக மனுதாரர் நிறுவனம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இருப்பினும், டிரான் அலஸ் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து விலகியதன் பின்னர், குறித்த காகித கொள்வனவுக்காக பிந்திய திகதியிட்டு வழங்கப்பட்ட பல காசோலைகளை பரிமாற்றம் செய்வதில் ஏற்பட்ட சிக்கல் தொடர்பில் கேசர லங்கா தனியார் நிறுவனம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களம், அது தொடர்பான தகவல்களை கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது முற்றிலும் வர்த்தக கொடுக்கல் வாங்கல் தொடர்பான சிவில் முரண்பாடு என்றும், இதனை குற்றவியல் சம்பவமாக கருதி மேற்கொள்ளப்படும் விசாரணைகள் சட்டத்திற்கு புறம்பானவை என்றும் மனுதாரர் தரப்பு நீதிமன்றத்தில் சாட்ச்சியங்களை முன்வைத்துள்ளது.
அத்துடன், குறித்த விசாரணைகளின் அடிப்படையில் தம்மை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், அதனைத் தடுத்து இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர் தரப்பு விடுத்த கோரிக்கையை அடுத்தே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.





