சர்வதேச கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல்
கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வென்னப்புவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 'தினிதி துவ' உள்ளிட்ட இரு ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் 12 மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்றுள்ளனர்.
சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளை நிறைவு செய்த பின்னர் மீண்டும் கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக மீனவ சங்கங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பில், உண்மையை கண்டறிவதற்காக தொழில்நுட்ப ரீதியிலான விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தாக்குதலில் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படும் 12 மீனவர்களில் நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வென்னப்புவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 'தினிதி துவ' உள்ளிட்ட இரு ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் 12 மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்றுள்ளனர்.
கடந்த 28 ஆம் திகதி அவர்கள் மீன்பிடிப் பணிகளை முடித்துக்கொண்டு மீண்டும் வென்னப்புவ நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது, சர்வதேச கடற்பரப்பில் வைத்து இந்திய கடற்படையினரின் கப்பலொன்று இவர்களை வழிமறித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து மீன்பிடி படகிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய அதிகாரிகள், மீனவர்களிடம் போதைப்பொருள் மற்றும் செய்மதித் தொலைபேசிகள் உள்ளனவா எனக் கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளதாக மீனவ சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இவ்விடயம் தொடர்பில் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கையில், தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் மீனவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மீனவ சங்கங்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்திற்கு வழங்கிய தகவலுக்கமைய, கடற்படை குழுவொன்று சென்று குறித்த மீனவர்களை கரைக்கு அழைத்து வந்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளது.
எனினும், இந்திய கடற்படையினரால் தாக்கப்பட்டார்களா? என்பது தொடர்பில் உண்மையைக் கண்டறிவதற்கான தொழில்நுட்ப ரீதியிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. செய்மதி தகவல்களைக் கொண்டு மீனவர்கள் இருந்த பகுதியை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், தற்போது அவர்கள் இந்திய கடற்படையினரால் தாக்கப்பட்டதாக உறுதியாக எம்மால் கூற முடியாது. சம்பவத்துடன் தொடர்புடைய மீனவர்களிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
இந்த தாக்குதல் குறித்துப் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கையில், இந்திய கடற்படையினர் மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக சந்தேகம் எழுப்பி, படகிலிருந்த உபகரணங்கள் மற்றும் உடைமைகளைச் சேதப்படுத்தியதோடு, இலங்கை எல்லைக்கு மிக அண்மித்த பகுதியில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சுமத்துகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, "இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பாக முறையான மற்றும் விரிவான விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு இலங்கை கடற்படைக்கும் வெளிவிவகார அமைச்சுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.





