நிவாரணக் கொடுப்பனவுகள் எக்காரணத்துக்காகவும் நிறுத்தப்படமாட்டாது - அரசாங்கம்
அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை குறைப்பதற்கோ அதிகரிக்கப்பட்ட அடிப்படை சம்பளத்தை செலுத்தாமலிருப்பதற்கோ அரசாங்கம் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை.
அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படமாட்டாது. அஸ்வெசும உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த நிவாரணக் கொடுப்பனவுகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படமாட்டாது. நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையுடன் பேணுவதற்கான முன்னாயத்தங்களுடன் இந்தத் தீர்மானங்கள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 10-03-2026 அன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை குறைப்பதற்கோ அதிகரிக்கப்பட்ட அடிப்படை சம்பளத்தை செலுத்தாமலிருப்பதற்கோ அரசாங்கம் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை. அதேபோன்று மக்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும உள்ளிட்ட நிவாரணக் கொடுப்பனவுகளும் எக்காரணத்துக்காகவும் நிறுத்தப்பட மாட்டாது.
அஸ்வெசு மாத்திரமின்றி தித்வா நிவாரணங்களும் நிறுத்தப்பட மாட்டாது. அதேபோன்று விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் உள்ளிட்ட தொழிற்துறைகளுக்கான நிவாரணங்களும் தொடர்ச்சியாக வழங்கப்படும். எதிர்காலத்தில் எதிர்கொள்ளக் கூடிய மோசமான விளைவுகளுக்கான முன்னாயத்தங்களுடன் தொடர்ந்தும் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையுடன் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.





