மலையகத் தமிழ் மக்களின் மீள் கட்டுமான பணிகளில் மாற்றாந்தாய் மனப்பாங்கு; சிவில் சமூகக் கூட்டிணைவு
தோட்ட நிறுவனங்கள் போன்ற இடைத்தரகர்களைத் தவிர்த்து அரசாங்கம் நேரடியாக நிவாரணங்களை வழங்க வேண்டும்.
தித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் நிவாரணம் மற்றும் மீள் கட்டுமானப் பணிகளில் அரசாங்கம் மாற்றாந்தாய் மனப்பாங்குடன் செயல்படுவதாக மலையக மீள் கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவின் சிரேஷ்ட உறுப்பினர் ஜூவரட்ணம் சுரேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பு மருதானையில் அமைந்துள்ள சமூக சமய மையத்தில் 10-01-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றம் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் ஏனைய பகுதிகளில் மீளமைப்புப் பணிகள் வேகமெடுத்துள்ள போதிலும், இடம்பெயர்ந்தவர்களில் 99 சதவீதமானோர் தங்கியுள்ள மலையகத்தின் ஐந்து மாவட்டங்களில் அத்தகைய முன்னேற்றம் காணப்படவில்லை. ஏற்கனவே நிலவும் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இம்மக்கள் அனர்த்தங்களினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் அறிவித்துள்ள நிவாரணத் திட்டங்களை அணுகுவதில் போதிய கொள்கைத் தெளிவின்மை, நில உரிமைகள் தொடர்பான சிக்கல்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளின் அனுபவக்குறைவு போன்றவை பெரும் தடையாக இருக்கின்றது.
குறிப்பாக, ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட நிலத்திற்கான ஐம்பது இலட்சம் ரூபாய் மற்றும் வீடமைப்பிற்கான ஐம்பது இலட்சம் ரூபாய் நிதியுதவியை மக்கள் பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையை உடனடியாகத் தெளிவுபடுத்துவதோடு, நிலங்களை அடையாளம் காண்பதற்கும் புனரமைப்புப் பணிகளைக் கண்காணிப்பதற்கும் பல்தரப்புப் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்றை ஜனாதிபதி நியமிக்க வேண்டும்.
மேலும், தோட்ட நிறுவனங்கள் போன்ற இடைத்தரகர்களை தவிர்த்து அரசாங்கம் நேரடியாக நிவாரணங்களை வழங்க வேண்டும். இந்திய வீடமைப்புத் திட்டத்தைப் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் பாகுபாடின்றி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் அபாயகரமான இடங்களுக்குத் தள்ளாமல் அவர்களைத் தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் வகையில் பாதுகாப்பான நில உரிமையுடன் கூடிய நிரந்தரத் தீர்வுகளை வழங்க வேண்டும் என்றார்.





