அனர்த்தத்தை கட்டுப்படுத்துவதில் ஜனாதிபதி அநுர தவறிழைப்பு: கபீர் ஹாசிம்
2005ல் அனர்த்த முகாமைத்துவ சட்டம் ஒன்றை நல்லாட்சி அரசாங்கத்தில் நாங்கள் அனுமதித்துக்கொண்டோம். அதில் அனர்த்த முகாமைத்துவ கவுன்சில் ஒன்று இருக்கிறது.
நாட்டில் இடம்பெறும் அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்யும் அதிக அதிகாரம் அனர்த்த முகாமைத்துவ கவுன்சிலுக்கே இருக்கிறது. ஆனால் அனர்த்தம் தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும் அதனை கூட்டி, நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி தவறி இருக்கிறார். அதனால் இடம்பெற்ற அனர்த்தத்தை கட்டுப்படுத்த தேவையான அரசியல் தலைமைத்துவம் வழங்கப்படவில்லை என்பது தெளிவாகிறது என எதிர்க்கட்சி உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 05-12-2025அன்று இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, வர்த்தக வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், நாட்டின் தற்போதைய நிலைமையில் அரசாங்கத்தின் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்ட அறிக்கை பொருத்தமில்லை. அதனால் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கு தேவையான புனர் நிர்மாண பணிகளுக்காக விரைவா குறைநிரப்பு பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அனுமதித்துக்கொள்ள வேண்டும். அதற்கு எதிர்க்கட்சியாக நாங்கள் பூரண ஆதரவை வழங்க தயாராக இருக்கிறோம்.
அதேநேரம்,கடந்தவாரம் நாங்கள் பாராளுமன்ற அமர்வை பகிஷ்கரித்து வெளியில் சென்றோம். நாட்டில் பாரிய அனர்த்தம் ஒன்று இடம்பெற்றிருக்கையில், பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தெரிவிப்பதற்கு இடமளிக்க அரசாங்கம் மறுக்கும்போது, அரசாங்கம் தவறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அது தொடர்பில் சுட்டிக்காட்டும் பொறுப்பு எதிர்க்கட்சிக்கு இருக்கிறது. அதனால் எதிர்க்கட்சியாக நாங்கள் எமது பொறுப்பை சரியாக நிறைவேற்றி வருகிறோம். அதேபோன்று இந்த அனர்த்தத்தில் இருந்து நாட்டை மீட்பதற்கு அரசாங்கத்துக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அத்துடன் இந்த அனர்த்தம் தொடர்பில்ம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரமே இருக்கிறது.அரச அதிகாரிகள் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள அச்சப்படுகின்றனர். அதற்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அது முறையாக வழங்கப்பட்டதா என்பதுதான் கேள்வி.
2005ல் அனர்த்த முகாமைத்துவ சட்டம் ஒன்றை நல்லாட்சி அரசாங்கத்தில் நாங்கள் அனுமதித்துக்கொண்டோம். அதில் அனர்த்த முகாமைத்துவ கவுன்சில் ஒன்று இருக்கிறது. அதன் ஊடாக ரணிவ் விக்ரமசிங்க 2023, 2030 காலப்பகுதிக்கான தேசிய அனர்த்த முகாமைத்துவ திட்டம் ஒன்றை தயாரித்து, அதற்கு அனுமதியையும் பெற்றுக்கொண்டிருந்தார்.
அந்த திட்டம் தொடர்பில் இந்த அரசாங்கத்தின் கீழ் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி தலைமையில், அனர்த்த முகாமைத்துவ கவுன்சில் கூட்டப்பட்டு, கலந்துரையாடப்பட்டிருந்தது. குறித்த கவுசிலின் தலைவராக ஜனாதிபதி இருப்பதுடன் இரண்டாவதாக பிரதமர் இருக்கிறார். மூன்றாமவராக எதிர்க்கட்சித் தலைவர் இருக்கிறார்.
அதில் பிரதான அமைச்சரவை அமைச்சர்கள் 20பேர் இருக்கிறார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 5பேர் இருக்கிறார்கள். நாட்டில் இடம்பெறும் அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்யும் அதிக அதிகாரம் இந்த கவுன்சிலுக்கே இருக்கிறது.அதில் குறித்த அன்ர்த்த முகாமைத்துவ திட்டத்தையும் ஜனாதிபதி அனுமதித்துக்கொண்டார்.
அவ்வாறு இருக்கையில், நாட்டில் அனர்த்த எச்சரிக்கை இருப்பதாக நவம்பர் 17,18ஆம் திகதிகளில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டபோதும், ஜனாதிபதி ஏன் அனர்த்த முகாமைத்துவ கவுன்சிலை கூட்டி, இதுதொடர்பில் கலந்துரையாடவில்லை? அவ்வாறு கூட்டி இருந்தால், அங்கு அனைத்து தரப்பினரும் கலந்துரையாடி தீர்மானம் எடுத்திருந்தால், இந்த அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்து, பாதிப்பை குறைத்துக்கொண்டிருக்கலாம்.
கவுன்சிலை கூட்டி இருந்தால், அன்ர்த்த நிலையை பிரகடனப்படுத்தி இருக்கலாம். அதன் மூலம் ஏற்பட்டிருக்கும் அனர்த்தத்தை குறைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அதனை செய்யவில்லை. அரசியல் தலைமைத்துவம் வழங்கவில்லை என்பது தெளிவாகிறது என்றார்.





