திம்பு கோட்பாட்டின் அடிப்படையில் புதிய தீர்வுத்திட்டம்: தமிழ்த் தேசியப் பேரவை
குறித்த இத்தீர்மானங்களை மக்கள் மயப்படுத்தும் வகையில் மாவட்ட மட்ட, கிராம மட்ட செயல்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய உபாயங்கள் பற்றியும் ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சட்டநாதர் கோவில் வீதியில் அமைந்துள்ள இளங்கலைஞர் மன்றத்தில் தமிழ்த் தேசிய பேரவை ஏற்பாட்டில் நேற்றையதினம் 'ஏக்கிய ராஜ்ய' அரசியலமைப்பை நிராகரிக்கும் அரசியல் நிலைப்பாட்டையும், தமிழ்த்தேசம்–இறைமை–சுயநிர்ணயம் ஆகிய அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்கும் தீர்வை வலியுறுத்தும் நோக்கிலும், 15-02-2026 அன்று முற்பகல் 10.30இற்கு கூட்டடமொன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட கட்சியின் அங்கத்தவர்களும், மதகுருமார்கள், ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களையும் முன்வைத்தனர்.
அந்த அடிப்படையில், 'ஏக்கிய ராஜ்ய' அரசியலமைப்பு வரைவை முழுமையாக நிராகரித்தல், தமிழ்த்தேசம் என்ற அரசியல் அடையாளத்தை அங்கீகரித்தல், ஈழத்தமிழர்களின் இறைமை உரிமை மற்றும் சுயநிர்ணய உரிமை என்பவற்றை அரசியல் தீர்வின் அடிப்படையாக வலியுறுத்தல், திம்புகோட்பாட்டை மீண்டும் அரசியல் உரையாடலின் மையமாக கொண்டு வருதல் ஆகிய தீர்மானங்கள் ஏகமனதாக எடுக்கப்பட்டதோடு இவற்றை அடிப்படையாக்க கொண்டு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் வகையிலான புதிய அரசியல் தீர்வு முன்மொழிவை இறுதி செய்வதற்கும் அதனை தயாரிப்பதற்கானவொரு நிபுணர்கள் குழுவை நியமிப்பதோடு அந்த வரைவை பொதுச்சபையில் அங்கீகரிப்பதெனவும் இணக்கப்பாடு எட்டுப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த கூட்டத்தின் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் இக்கூட்டம், அரசியல் சமரசங்களின் வழியே உரிமைகள் சுருங்கிக்கொண்டே போகும் சூழலில், தமிழர் அரசியல் உரிமைகளை அடிப்படைக் கோட்பாட்டின் மேல் மீண்டும் நிலைநிறுத்தும் முயற்சியாக கருதப்படுவதோடு கொள்கை அளவில் இந்த தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளும் தப்பினர் இணைந்து செயற்படுவதற்கான வாயில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த இத்தீர்மானங்களை மக்கள் மயப்படுத்தும் வகையில் மாவட்ட மட்ட, கிராம மட்ட செயல்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய உபாயங்கள் பற்றியும் ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த கலந்துரையாடல் மற்றும் தீர்மானங்கள் சம்பந்தமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,
தமிழ் தேசத்தினுடைய அரசியல் அபிலாஷைகளை பாதுகாப்பதற்கும் அதேநேரம் அந்த அரசியல் அபிலாஷைகளை முழுமையாக அனுபவிக்கக் கூடியவொரு அரசியல் தீர்வை வலியுறுத்துவதற்குமான கலந்துரையாடல் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது.
இந்த கலந்நுரையாடலிலே ஏகமனதாக சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தக்கலந்நுரையாடலிலே கலந்து கொண்ட அத்தனை அமைப்புகளும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் அரசியல் கட்சிகளும் வெகுஜன அமைப்புகளையும் தாண்டி எதிர்காலத்திலும் இந்த முயற்சிகளிலே கலந்தகொள்ள விரும்புகின்ற அரசியல் கட்சிகள் பொதுஅமைப்புகள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் போன்ற பல தரப்புகளுக்கும் கதவு திறந்திருக்கும் என்றொரு தீர்மானம் எடுக்கப்பட்டது.
கலந்துரையாடலில் கலந்து கொண்ட அத்தனை அமைப்புகளும் நபர்களையும் உள்வாங்கி வகையில் ஒரு பொதுச்சபையை ஸ்தாபிப்பதற்கும் முடிவு எடுக்கப்பட்டது. அந்த பொதுச்சபையிலிருந்து தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் திம்பு கோட்பாடுகளை மையப்படுத்தி தமிழ் மக்கள் பூரண சுயாட்சியை பெறக்கூடிய புதிய முன்மொழிவை முன்வைப்பதற்கு ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.
அந்த யோசனைகளை தயார்படுத்துகின்ற நோக்கத்தோடு ஒரு நிபுணர்கள் குழு நியமிக்கப்படுவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அந்தக்குழு எதிர்வரும் காலத்தில் யோசனைகளை தயாரித்து பொதுச் சபையிலே முன்வைப்பார்கள். அதன்பின்னர் பொதுச்சபையின் கருத்துக்களின் அடிப்படையில் அடுத்த கட்டமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது.
அதேநேரம், எதிர்வரும் 10 நாட்களுக்குள் நிபுணர்கள் குழுவினுடைய பெயர் பட்டியல் இறுதி செய்யப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் நான் ஏற்கனவே சொன்னது போல இந்த அமைப்புகள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்கொண்ட இந்த பொதுச்சபை தொடர்ந்து கூடிக்கொண்டே இருக்கும்.
அரசியல் ரீதியாக செயற்பட வேண்டிய முடிவுகள் அந்தந்த நேரத்தில் உருவாக்க வேண்டிய குழுக்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முடிவுகள் அனைத்துமே பொதுச்சபையால் மட்டுமே எடுக்கப்படும் என்ற இணக்கப்பாடும் எட்டப்பட்டிருக்கின்றது.
அந்த வகையில் நாங்கள் எதிர்பார்த்த வகையில் குறிப்பாக 'ஏக்கிய ராஜ்ய' அரசியலமைப்பை நிராகரிக்கவும் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்ட முடிவும் எங்களது அரசியல் அபிலாஷைகள் வலியுறுத்த வேண்டியதற்கு எவ்வகையான பொது யோசனைகள் முன்வைப்பதற்கான நடைமுறை சார்ந்த செயற்பாடுகளுக்கும் ஏகமனதாக இணங்கியது. இந்த முயற்சிக்கு பூரண வெற்றியளித்திருக்கிறது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன் என்றார்.





