சர்வதேச நாணய நிதிய விரிவாக்கப்பட்ட நிதிவசதி செயற்திட்டம் 5 ஆம் கட்ட மீளாய்வு முன்னெடுப்பு
விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின் அமலாக்கம் மற்றும் அடைவுகள் மிகவும் வலுவான நிலையில் இருப்பதுடன், இச்செயற்திட்டத்தின் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான அர்ப்பணிப்பை அரசாங்கம் கொண்டிருக்கிறது.

தற்போது இலங்கையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் கட்ட மீளாய்வை முன்னெடுத்துவருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜுலி கொஸாக் தெரிவித்துள்ளார்.
வொஷிங்கடனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் மாதாந்த செய்தியாளர் சந்திப்பின்போது இலங்கை தொடர்பான மீளாய்வுக்கான கால எல்லை என்னவென்றும், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதுசார்ந்த சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்பார்ப்புக்கள் எவை என்றும் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஜுலி கொஸாக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: இலங்கையுடனான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான 4 ஆம் கட்ட மீளாய்வு நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையினால் கடந்த ஜுலை மாதம் முதலாம் திகதி முடிவுறுத்தப்பட்டது. அதனூடாக பொருளாதார கொள்கைகள் மற்றும் மறுசீரமைப்புக்குப் பங்களிப்புச் செய்யக்கூடியவகையில் 350 மில்லியன் டொலர் நிதி இலங்கைக்கு வழங்கப்பட்டது. அதன்மூலம் இதுவரையில் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியின் பெறுமதி 1.74 பில்லியன் டொலராக உயர்வடைந்தது.
அதேபோன்று இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் வலுவான மறுசீரமைப்பு செயன்முறையானது தொடர்ந்து நேர்மறையான முன்னேற்றத்தைப் பதிவுசெய்து வருகிறது. பணவீக்கம் வீழ்ச்சியடைந்திருப்பதுடன் அதே மட்டத்தில் தொடர்கிறது. அரசாங்கத்தின் வருமானத்திரட்சியில் முன்னேற்றம் அடையப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கையிருப்பு தொடர்ந்து வலுவடைந்துவருகிறது.
அத்தோடு தீவிர நெருக்கடியின் பின்னர் கடந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரம் 5 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்தமை குறிப்பிட்டுக்கூறத்தக்க முக்கிய அடைவாகும். 2022 இல் 8.2 சதவீதமாகப் பதிவான வருமானத்துக்கு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதம், 2024 இல் 13.5 சதவீதமாக உயர்வடைந்தது. கடன்மறுசீரமைப்பு செயன்முறையானது பூர்த்தியடையும் தருவாயில் உள்ளது.
விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின் அமலாக்கம் மற்றும் அடைவுகள் மிகவும் வலுவான நிலையில் இருப்பதுடன், இச்செயற்திட்டத்தின் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான அர்ப்பணிப்பை அரசாங்கம் கொண்டிருக்கிறது.
மேலும் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் கட்ட மீளாய்வை மேற்கொள்வதற்கான எமது குழுவொன்று இப்போது இலங்கையில் இருக்கிறது. அக்குழுவினர் அரச தரப்பினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்துவருகின்றனர். மீளாய்வின் நிறைவில் அதுபற்றி குறித்த குழுவினர் ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்துவர் என்றார்.