தமிழ்த்தரப்புக்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டும்: தமிழ்த்தேசியக் கட்சிகளின் சந்திப்பில் வலியுறுத்து
மாகாணசபை தேர்தலில் தமிழ்த்தரப்புக்கள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அதனை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய நகர்வுகள் குறித்தும் இச்சந்திப்பில் ஆராயப்பட்டது.

மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கு உரிய அழுத்தங்களை பிரயோகிக்கும் அதேவேளை,அத்தேர்தலை இலக்காகக்கொண்டு தமிழ்த்தரப்புக்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டும் என தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையில் நடைபெற்ற சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீண்டகாலம் நடத்தப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டுவரும் மாகாணசபை தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும்,அதற்குரிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கிலும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் உள்ள டில்கோ ஹோட்டலில் 15-10-2025 அன்று பிற்பகல் 4 மணிக்கு நடைபெற்றது.
சுமார் இரண்டு மணிநேரம் வரை நீடித்த இச்சந்திப்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், சமத்துவக் கட்சியின் தலைவர் சந்திரகுமார் மற்றும் முன்னாள் இணைந்த வட-கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அதேவேளை இச்சந்திப்பில் பங்கேற்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அக்கட்சியின் சார்பில் எவரும் சந்திப்பில் பங்கேற்றிருக்கவில்லை.
இச்சந்திப்பில் மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அழுத்தம் வழங்குவதுடன் வலுவான அதிகாரப்பரவலாக்கத்தை பெற்றுக்கொள்வது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மாகாணசபை தேர்தல்களை விரைவில் நடத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அதனை முன்னிறுத்தி ஜனநாயக தமிழத்தேசியக் கூட்டணியினால் வடக்கில் ஒவ்வொரு பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது.
அதேவேளை மாகாணசபை தேர்தலில் தமிழ்த்தரப்புக்கள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அதனை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய நகர்வுகள் குறித்தும் இச்சந்திப்பில் ஆராயப்பட்டது.
அதற்கமைய எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன் உள்ளடங்களாக ஒருமித்து இணைந்து பயணிக்க விரும்பும் தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்துவதற்கு தாம் உத்தேசித்திருப்பதாகவும், எதிர்வரும் சந்திப்புக்களில் தமிழரசுக் கட்சியினரும் பங்கேற்பர் என எதிர்பார்ப்பதாகவும் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
மேலும் சிறுபான்மையின மக்களுக்கு,குறிப்பாக தமிழ் மக்களுக்கு அவசியமான மிக முக்கிய கட்டமைப்பாக மாகாண சபைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தேர்தலை தொடர்ந்து பிற்போடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சுட்டிக்காட்டிய அவர் அத்தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டியது அவசியம் என்பதே தமது நிலைப்பாடு என்றார்.