'இலங்கை ஓர் சிங்கள - பௌத்த நாடு என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்'.
'இலங்கையில் பௌத்த மயமாக்கலைத் தடுக்கக் கூடாது' 'பௌத்த எச்சங்களின் மீதே சிவலிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன'. இது தான் இன்று சிங்கள அரசியல் தலைவர்களதும் பௌத்த பீடாதிபதிகளதும், சிங்கள இனவாத போக்காளர்களதும் கூற்று. தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கலை நிறுத்துமாறு தமிழர் தரப்பு கோரிக்கை முன்வைத்தால் சிங்கள தரப்பின் பதில் இதுவாகவே இருக்கிறது. தமிழர் தேசம் தொடர்ந்தும் பௌத்தமயமாக்கல் அச்சுறுத்தலை எதிர்கொண்டுவருகிறது, இதனுடைய பின்னணி, இன்னும் 20 வருடங்களின் பின்னால் எவரும் வடக்கு-கிழக்கை தமிழர் தேசம் என கூறக்கூடாது. அதேபோல் அரசியல் தீர்வு என்று கூறிக்கொண்டோ அல்லது வடக்கு-கிழக்கு தமிழர்களுடைய தாயகம் என்று கூறிக்கொண்டோ எவரும் போராடமுடியாது-போராடக்கூடாது என்பதே ஆகும்.
திரிபுபடுத்தப்பட்ட வரலாற்று பின்னணியை வைத்துக்கொண்டு இந்த நாடு சிங்கள-பௌத்த நாடு என்று வாய்கூசாமல் பொய் வரலாற்றை உலகுக்கும் சிங்கள மக்களுக்கும் கூறிக்கொண்டு தங்களுடைய இனவாத நிகழ்ச்சி நிரலை அடாவடியாக முன்னெடுக்கிறது இலங்கை அரசாங்கமும் அவர்களுடைய கைக்கூலிகளும். நாட்டில் சிங்கள - பௌத்தர்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளதாலும் ஆட்சி அதிகாரம், முப்படைகள், காவல்துறை, பிக்குகளின் அமைப்புகள் என அதிகாரம் சிங்களவர்கள் கையில் இருப்பதாலும் பொய்களை உண்மையாக்க முயல்கின்றனர். அமெரிக்காவின் பூர்வீக குடிகளான செவ்விந்தியருக்கும் அவுஸ்திரேலியாவின் பூர்வீக குடிகளுக்கும், கனடாவின் பூர்வீக குடிகளுக்கும் ஏறத்தாழ இதே நிலைமைதான்.
பௌத்தம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டு சில நூறு வருடங்களே ஆகின்றன. சைவத்திலிருந்து பௌத்தத்திற்கு சிங்களவர்கள் மாறியதால் தான் விகாரைகளில் சைவக் கடவுள்களின் சிலைகளையும் படங்களையும் வைத்துள்ளனர். மேலும் சிங்களம் ஆதி மொழியாக இருந்திருப்பின் தமிழுக்குள் பல சிங்களச் சொற்கள் கலந்திருக்கும். ஆனால் தமிழில் ஒரு சிங்கள வார்த்தைகூட கிடையாது. ஆனால், சிங்கள மொழியில் 40 வீதம் தமிழ் மொழி கலந்திருப்பதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வரலாறு சிங்கள அரசாங்கத்துக்கோ பௌத்த தேரர்களுக்கோ தெரியாமலில்லை. ஆனால், இலங்கை என்ற தீவை ஒட்டுமொத்தமாக பௌத்த தேசமாக மாற்றுவதற்காக உண்மையான வரலாற்றை மறைத்து சிங்கள மக்களை உசுப்பேத்திவிடும் கைங்கரியத்தை கடந்த 75 வருடங்களுக்கு மேலாக முன்னெடுத்து தங்களுடைய அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொண்டு வருகிறார்கள்.
சிங்கள தேசத்தின் இந்த நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக தமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களாக பல்வேறுபட்ட போராட்டங்களை முன்னெடுத்திருந்தாலும் சிங்கள தேசத்திடம் தமிழர் தேசம் தொடர்ந்தும் தோல்வியையே சந்தித்துவருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், தமிழர்களிடத்தில் காணப்படும் ஒற்றுமையின்மை பிரதான காரணமாகும். சிங்களவர்கள் அரசியலுக்காக பிரிந்து நின்றாலும் தமிழரை ஒழிப்பதிலும் தமிழர் தேசத்தை அழிப்பதிலும் ஒற்றுமையாகவே செயற்பட்டுவந்திருக்கிறார்கள்-செயற்பட்டுவருகிறார்கள். ஆனால், சிங்கள தேசத்தின் அச்சுறுத்தலை - அடாவடிகளை எதிர்த்து போராடுவதில் கூட தமிழர்கள் சிதறியே காணப்படுகிறார்கள். இது வரலாற்றுப் பாடம்.
இத்தனை இழப்புகள்-துயரங்களை சந்தித்த பின்னரும் கூட தமிழர்கள் பிரிந்தே நிற்கிறார்கள். குறிப்பாக அண்மையில் தையிட்டியில் கட்டப்பட்டு திறக்கும் தருவாய்க்கு வந்த வேளையில் தமிழர் கண்ணில் பட்ட விகாரை விவகாரத்தில் கூட தமிழ் தலைமைகளுக்குள் இரட்டை வேடம் வெளிப்பட்டதை அவதானிக்க முடிந்தது. குறித்த விகாரை கட்டப்படும்பொழுது அதற்கு அடிக்கல் நாட்டியது முதல் குறித்த விகாரை கட்டப்படுவது தொடர்பில் சில தரப்புகள் தமிழ் தலைவர்களின் கவனத்துக்கு கொண்டுவந்த நேரத்தில் அதனை உதாசீனம் செய்தவர்கள் வரை அண்மையில் குறித்த விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களுக்கு எதுவுமே தெரியாது போன்று முகம்வாடியவர்கள் போன்ற தோற்றத்தை காண்பித்திருந்தார்கள். இது தான் 2009 இற்கு பின்னரான தமிழ் தேசியம். இந்த நிலைமை மாறாதவரை தமிழருக்கு விடிவு கேள்விக்குறியே. ஒற்றுமையான-ஒளிவுமறைவில்லாத பயணமே தமிழருக்கான விடிவை பெற்றுத்தரும். அந்த நிலைமை உருவாகாதவரை தமிழர்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருப்பார்கள், தமிழர் தேசம் தமிழர்களிடமிருந்து மெல்ல மெல்ல சிங்கள தேசத்தின் கைகளுக்கு சென்றுகொண்டே இருக்கும்.
'நீதிக்கான குரல்' இதழின் வாயிலாக வாசகர்கள் அனைவருக்கும் எமது வேண்டுகோள் என்னவென்றால், நாம் அனைவரும் ஒன்றுபட்டு நீதிக்காக போராட முன்வரவேண்டும். மேலும் இந்த இதழை உங்களது நண்பர்கள்;, உறவினர்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்கவேண்டும் என்று வேண்டுகிறோம்.
ஒன்றிணைந்து! இச்சமூகத்தை மாற்ற நம்மால் இயலும். அடுத்த பதிப்பில் யாம் உங்களை சந்திப்போம், அதுவரை அன்புடன்,
உங்கள்
சதீஸ்சன் குமாரசாமி
தலைமை ஆசிரியர்