வரித்திணைக்கள பிரதி ஆணையாளருக்கு பிணை
முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் பிரதிவாதியை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.மேலும் இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

உள்நாட்டு இறைவரித்திணைக்களத்துக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவையான 11 இலட்சம் ரூபாவை நீக்குவதற்காக வர்த்தகரொருவரிடம் 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் பிரதி ஆணையாளரை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் 22-07-2025அன்று உத்தரவு பிறப்பித்தது.
கொழும்பு ஜாவத்தை வீதியில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் கிளை அலுவலகத்தின் பிரதி ஆணையாளர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்ததுடன் அவரை 10 இலட்சம் ரூபா இரு சரீரப்பிணை களில் செல்ல கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குணுவல அனுமதியளித்தார். மேலும் அவரை விசாரணை அதிகாரிகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த வழக்கு 22-07-2025அன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது பிரதிவாதி தரப்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் விடயங்களை முன்வைத்து தனது சேவை பெருநரை விளக்கமறியலில் வைத்தமையால் அவரது 14 வயது மகன் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
குறித்த சிறுவன் பாடசாலைக்கு செல்வதில்லை எனவும் உணவு உண்பதை தவிர்த்து வருவதாகவும் குறிப்பிட்ட சட்டத்தரணி அவர் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இதனை முக்கியமாக விடயமாக கருத்திற்கொண்டு தனது சேவை பெருநரை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் பிரதிவாதியை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.மேலும் இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கொழும்பு தெமட்டகொட கொலன்னாவை பிரதேசத்தில் இயங்கி வரும் நிறுவனமொன்றின் 2025 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு இறைவரித்திணைக்களத்துக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவை 11 இலட்சம் ரூபாவை நீக்குவதற்காக அந்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் சந்தேகநபர் ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் கோரியுள்ளார். பின்னர் அந்த இலஞ்சத்தை 50 ஆயிரம் ரூபா இலஞ்சமாக குறைத்ததாக தெரிவித்து குறித்த வர்த்தகர் இந்த முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
சந்தேக நபர் குறித்த பணத்தை தனது அலுவலகத்தில் வைத்து பெறுவதற்கு முற்பட்ட போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.