அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தால் 3600மில்லியனுக்கும் அதிக மருந்துகள் உற்பத்தி
2026 ஆம் ஆண்டில் 4,000 மில்லியன் மருந்துகளை உற்பத்தி செய்யவும் 10 புதிய மருந்து வகைகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கை அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனம் தனது வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாரிய முன்னேற்றத்தைப் பதிவுசெய்துள்ளது. 2025 ஆம் ஆண்டு 3,625 மில்லியன் மருந்துகளை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இக்காலப்பகுதியில் ஐந்து புதிய மருந்து வகைகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ள கூட்டுத்தாபனம், 27.6 பில்லியன் ரூபா வருமானத்தையும் ஈட்டியுள்ளது.
02-01-2026 அன்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம், புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு மருந்து வகைகளை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்விலேயே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன. இதன்போது, ‘மெதில்பிரெட்னிசோலோன்’மற்றும் ‘மொன்டிலூகாஸ்ட்’ ஆகிய இரண்டு புதிய மருந்துகள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டன.
அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனம் கடந்த ஆண்டு மருந்து விநியோகப் பிரிவின் அனைத்து மருந்துத் தேவைகளையும் நூறு வீதம் பூர்த்தி செய்துள்ளதுடன், கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் 385 மில்லியன் மருந்துகளை உற்பத்தி செய்து வரலாற்றில் அதிகூடிய உற்பத்தியைப்பதிவு செய்துள்ளது.
அத்துடன், 2025 மே முதல் 2027 மே மாதம் வரையிலான காலப்பகுதிக்கு சிறந்த உற்பத்தி நடைமுறைக்கான சான்றிதழையும் மருந்தகக் கூட்டுத்தாபனம் பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பேராசிரியர் ஜயந்த விஜயபண்டார கருத்துத் தெரிவிக்கையில், சர்வதேச தரத்திற்கு அமைவாகவும் குறைந்த விலையிலும் மருந்துகளை உற்பத்தி செய்வதே எனது இலக்கு. அதற்கமைய 2026 ஆம் ஆண்டில் 4,000 மில்லியன் மருந்துகளை உற்பத்தி செய்யவும் 10 புதிய மருந்து வகைகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இரத்மலானையில் அமைக்கப்பட்டு வரும் புதிய நவீன களஞ்சியத் தொகுதியை வரும் மார்ச் மாதம் திறக்கவுள்ளதாகவும் ஹோரண - மில்லேவ பகுதியில் புதிய உற்பத்தி மற்றும் பொதியிடல் வளாகங்களை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளை இலக்கு வைத்து இயங்கும் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனம், கடந்த ஆண்டில் தனது தரக் கட்டுப்பாட்டு முறைமையில் 85 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதுடன், பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





