அநுர ஆட்சியில் எரிவாயு விநியோகத்திலும் முறைகேடு : புபுது ஜயகொட
பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் இத்தகைய மக்கள் பிரச்சினைகளில் மௌனமாக இருக்கின்றனர்.
ஊழலற்ற ஆட்சியை உருவாக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், நிலக்கரி மற்றும் எரிவாயு கொள்வனவு விவகாரங்களில் பாரிய மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் 22-02-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்த கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலம் கூறுகையில். நிலக்கரி கொள்வனவு தொடர்பில் அரசாங்கம் முன்வைக்கும் விலை குறைப்பு என்ற வாதம் மக்களை ஏமாற்றும் ஒரு தந்திரமாகும். உலக சந்தையில் நிலக்கரிக்கு என பிரத்யேக விலை சுட்டெண்கள் காணப்படுகிறது.தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் விலை சுட்டெண்களை அடிப்படையாகக் கொண்டே கொள்முதல் விலைகள் தீர்மானிக்கப்பட வேண்டும்.
2018 மற்றும் 2020 ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில் உலக சந்தையில் நிலக்கரி விலை உயர்ந்து காணப்பட்டது, ஆனால் தற்போது விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இச்சூழலில் பழைய விலையுடன் ஒப்பிட்டு தற்போது மலிவாக வாங்கியிருப்பதாகக் கூறுவது அபத்தமானது. குறிப்பாக, உயர் தரம் கொண்ட நிலக்கரிக்கு பதிலாக குறைந்த தரம் கொண்ட நிலக்கரியையே அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது.
உலக சந்தையில் மெட்ரிக் தொன் ஒன்று 70 டொலர்களுக்குக் கிடைக்கக்கூடிய தரம் குறைந்த நிலக்கரியை, அரசாங்கம் 98.53 டொலர்களுக்கு வாங்கியுள்ளது. இதன் மூலம் ஒரு கப்பலுக்கு மாத்திரம் சுமார் 20 மில்லியன் டொலர்கள் வரை மேலதிக இலாபத்தை ஒரு தனியார் நிறுவனம் ஈட்டியுள்ளது. இதுவரை வந்துள்ள 8 கப்பல்கள் மூலம் நாட்டுக்கு சுமார் 240 மில்லியன் டொலர் வரை நட்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அரிசி இறக்குமதியில் மோசடி செய்ததாகக் கணக்காய்வாளர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட நிறுவனங்களுக்கே தற்போது நிலக்கரி ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள். எரிவாயு தட்டுப்பாடு குறித்த அமைச்சரின் விளக்கங்கள் முற்றிலும் முரணானவை. மக்கள் பீதியடைந்து எரிவாயுவைச் சேகரிப்பதாகக் கூறுவது வேடிக்கையானது, ஏனெனில் எரிவாயுவை உருளைகளில் மட்டுமே நிரப்ப முடியும்.
உண்மையில், ஓமான் நிறுவனத்திடம் இருந்து எரிவாயு பெற்று வந்த லிட்ரோ நிறுவனம், தற்போதைய ஆட்சியின் கீழ் திடீரென விநியோகத் திறனற்ற ஒரு அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விநியோக உரிமையை மாற்றியுள்ளது. இலங்கைக்கு மாதம் நான்கு கப்பல்கள் தேவைப்படும் நிலையில், குறித்த நிறுவனத்திடம் இரண்டு கப்பல்கள் மட்டுமே உள்ளன. இத்தகைய திட்டமிடப்படாத தீர்மானங்களாலேயே இன்று நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் புதிய மின்சாரக் கொள்கைகள் நுகர்வோர் மீது பாரிய சுமையை ஏற்றும் ஒரு நடவடிக்கையாகும். இப்புதிய கொள்கையின்படி, மின்சாரத்திற்கான அனைத்து மானியங்களும் நிறுத்தப்படவுள்ளதோடு, குறைந்த அலகு மின்சாரத்தைப் பயன்படுத்தும் ஏழை நுகர்வோர் கூட இனி மாதம் 1900 ரூபா வரை மின்சாரப் பட்டியலைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். சூரிய சக்தி மின்சார உற்பத்தியை ஊக்குவிப்பதாகக் கூறிக்கொண்டு, சாதாரண மக்களின் உற்பத்திகளுக்குத் தடையாக இருக்கும் வகையில் மின்சாரக் கட்டமைப்புகள் பேணப்படுகிறது.
பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் இத்தகைய மக்கள் பிரச்சினைகளில் மௌனமாக இருக்கின்றனர். அவர்கள் அரசாங்கத்தின் அதே பொருளாதாரக் கொள்கைகளையே பின்பற்றுகின்றனர், பாராளுமன்றத்திற்கு வெளியே ஒரு வலுவான மக்கள் எதிர்க்கட்சியை கட்டியெழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம். மக்கள் மீது சுமத்தப்படும் இந்த அநீதியான பொருளாதாரச் சுமைகளுக்கு எதிராக அடுத்த வாரம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு முன்பாகப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.





