எரிபொருள் விலை உயர்வை உடனடியாக மீளப்பெறுங்கள் - எதிர்க்கட்சி தலைவர் சஜித்
எண்ணெய் விலை சடுதியாக உயர்கிறது என அரசாங்கம் நாட்டு மக்களிடம் பொய் கூறியுள்ளது. அதிகரித்த எண்ணெய் விலை சில மணி நேரங்களிலேயே மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அநீதியான முறையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை உடனடியாகக் குறைத்து, மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
பழைய கையிருப்புகளை அதிக விலைக்கு விற்பனை செய்வது நுகர்வோருக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று புதன்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து அவர் இதனை வலியுறுத்தினார்.
உலக சந்தையில் ஒரு பீப்பாய் எண்ணெய் 70 அமெரிக்க டொலராகக் காணப்படும் நிலையில், மத்திய கிழக்கின் போர்ச் சூழலைச் சாட்டி விலைச் சூத்திரத்தை மாற்றி விலையை அதிகரிப்பது ஊழல் நிறைந்த செயலாகும். குறைந்த விலையில் (70 டொலர்) இறக்குமதி செய்யப்பட்ட பழைய கையிருப்புகளுக்கு புதிய விலையை அறவிடுவது அடிப்படை உரிமை மீறலாகும் என அவர் தெரிவித்தார்.
எண்ணெய் விலை சடுதியாக உயர்கிறது என அரசாங்கம் நாட்டு மக்களிடம் பொய் கூறியுள்ளது. அதிகரித்த எண்ணெய் விலை சில மணி நேரங்களிலேயே மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. உண்மையில் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை இருந்ததை விட மேலும் குறைந்துள்ள நிலையில், இந்த விலை அதிகரிப்பை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இத்தீர்மானத்தால் சாதாரண பொது மக்கள் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் வருமானம் ஈட்டுபவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே ஊழல் நிறைந்த தற்போதைய விலை அதிகரிப்பு தீர்மானத்தை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். 70 டொலருக்கு இறக்குமதி செய்யப்பட்ட விலையின் அடிப்படையில் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். மக்கள் மீது வரிச்சுமையையும் அழுத்தத்தையும் திணிப்பதை நிறுத்தி, மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும்.
கண்முன்னே நடைபெறும் பொருளாதார அழிவை பார்த்துக் கொண்டு, யதார்த்தத்திற்குப் புறம்பாக நாட்டை ஆளுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும். நாட்டு மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்த வலுச்சக்தி பாதுகாப்பிற்கான நடைமுறை ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச மேலும் வலியுறுத்தினார்.





