அமைச்சர் லால் காந்த தனிநபரது பெயரை பேசவில்லை: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
லால் காந்தவோ அரசாங்கமோ கூறாத ஒரு விடயத்தையே ஊடகங்கள் கூறிக் கொண்டிருக்கின்றன.
அமைச்சர் லால் காந்த எந்தவொரு தனிநபரது பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை. ஆனால் சில ஊடகங்கள் எதற்காக மஹிந்தலை விகாரையின் விகாராதிபதியை இதற்குள் உள்வாங்கின என்பது தனக்கு அதிர்ச்சியளிப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 13-01-2026 அன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டு இடம் பெற்றது. இதன் போது அமைச்சர் லால் காந்த நிகழ்வொன்றில் ஆற்றிய உரை தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட போதே அவர் இவ்வாறு பதிலளித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அமைச்சர் லால் காந்தவோ அல்லது நானோ யாரையும் இலக்கு வைத்து எந்தவொரு குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. அமைச்சர் லால் காந்த 'மஹிந்தலை' என விளித்துக் கூறினாரே தவிர, அங்கு யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. அது அவரது தொகுதியாகும். அங்கு சுமார் 75 000 வாக்காளர்கள் உள்ளனர்.
அவர்களில் எந்தவொரு தனிநபரையும் அவர் கூறவில்லை. சில ஊடகங்களே அவ்வாறு கூறுகின்றன. லால் காந்தவோ அரசாங்கமோ கூறாத ஒரு விடயத்தையே ஊடகங்கள் கூறிக் கொண்டிருக்கின்றன. ஒரு தேரரை இலக்கு வைத்து அமைச்சர் அவ்வாறு கூறினார் என்று ஊடகங்களால் எவ்வாறு கூற முடியும்?
மஹிந்தலை விகாரையின் விகாராதிபதியை எதற்காக இதற்குள் ஊடகங்கள் உள்வாங்கின என்பது எமக்கும் அதிர்ச்சியளிக்கிறது. மிஹிந்தலையிலுள்ள 75 000 வாக்காளர்கள் குறித்து அமைச்சர் லால் காந்த நன்கு அறிவார். அவர்களில் ஒருவரை மனதில் கொண்டு அவர் அவ்வாறு தெரிவித்திருக்கலாம். அது யார் என்பதை அவரிடமே கேட்க வேண்டும். மாறாக அவர் மஹிந்தலை விகாரையின் விகாராதிபதியை தான் அவ்வாறு விளித்தார் என ஊடகங்கள் ஊகிப்பது பொறுத்தமற்றது என்றார்.





