மோட்டார் வாகன சட்டங்கள் திருத்தியமைக்கப்படும்: பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன
தித்வா புயல் தாக்கத்தால் நாட்டின் வீதி கட்டமைப்புக்களும், புகையிரத பாதைகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டன.
தித்வா புயல் தாக்கத்தால் சேதமடைந்த வீதிகள், புகையிரத பாதைகளை புனரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் கூட்டு செயற்பாடுகளினால் தான் குறுகிய காலத்துக்குள் எம்மால் முன்னேற்றமடைய முடிந்துள்ளன. மோட்டார் வாகன சட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியமான வகையில் திருத்தியமைக்கப்படுமென போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 08-01-2026 அன்று நடைபெற்ற மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் கீழான ஒழுங்குவிதிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டில் வீதி விபத்துக்கள் பாரியதொரு பிரச்சினையாக காணப்படுகிறது. வீதிச் சட்டங்களை அலட்சியப்படுத்தல், கவனயீனம் ஆகிய காரணிகளால் வீதி விபத்துக்கள் இடம் பெறுபின்றன. 2024 ஆம் ஆண்டு 2,403 வீதி விபத்துக்களும், 2025 ஆம் ஆண்டு 2,583 விபத்துக்களும் பதிவாகியுள்ளன. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் புகையிரதத்தில் மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் அண்மைகாலமாக உயர்வடைந்துள்ளன.இதற்கமைய புகையிரதத்தில் மோதி 2021 ஆம் ஆண்டு 208 பேரும், 2022 ஆம் ஆண்டு 414 பேரும், 2023 ஆம் ஆண்டு 402 பேரும், 2024 ஆம் ஆண்டு 407 பேரும், 2025 ஆம் ஆண்டு 374 பேரும் உயிரிழந்துள்ளார்கள்.
அதேபோல் புகையிரதத்தில் யானைகள் மோதி உயிரிழக்கும் சம்பவங்களும் தற்போது அதிகரித்துள்ளன. ஆகவே புகையரதத்தில் மோதி இடம்பெறும் விபத்துக்களை தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தித்வா புயல் தாக்கத்தால் நாட்டின் வீதி கட்டமைப்புக்களும், புகையிரத பாதைகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. குறுகிய காலத்துக்குள் பிரதான பாதைகள் மற்றும் புகையிரத பாதைகளை புனரமைத்துள்ளோம்.மன்னாருக்கான புகையிரத சேவை எதிர்வரும் மாதமளவில் முழுமையாக ஆரம்பிக்கப்படும் என்றார்.





