வடகீழ் பருவ பெயர்ச்சி ஆரம்பம் - வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 100 மீ.மீ. மழை வீழ்ச்சி எதிர்பார்ப்பு
இவ்வாரம் பதிவாகிய மழை வீழ்ச்சி மற்றும் நிலத்தின் தன்மையின் அடிப்படையில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகீழ் பருவ பெயர்ச்சி 09-12-2025 அன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. அதற்கமைய வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மாகாணங்களில் மழையுடனான காலநிலை எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
இவ்வாரம் பதிவாகிய மழை வீழ்ச்சி மற்றும் நிலத்தின் தன்மையின் அடிப்படையில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களை துரிதமாக அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்களின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதீப் கொடிப்பிலி மேலும் தெரிவித்தார்.
மண் சரிவுகள், வெள்ளம் ஏற்பட்ட பிரதேசங்களில் தொடர்ந்தும் அபாய நிலைமை காணப்படுகிறது. எனவே அவ்வாறான பிரதேசங்களை பார்வையிடுவதற்கோ அல்லது ஏனைய நடவடிக்கைகளுக்கோ செல்வது மிகவும் ஆபத்தானது மற்றும் பாதுகாப்பற்றது என்பதால் அதனை தவிர்த்துக் கொள்ளுமாறு பொது மக்களை அறிவுறுத்துகின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை தற்போதும் நாட்டின் சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பான திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய இதுவரையில் 25 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் எல்.எஸ்.சூரிய பண்டார தெரிவித்தார். எனினும் இதனால் அவற்றை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.





