பாதுகாப்பு பிரதியமைச்சருடன் சீன பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு
தற்போதைய மூலோபாய மாற்றத்தை விளக்கிய அவர், நாட்டின் நடுநிலையான அணிசேரா வெளிநாட்டுக் கொள்கைக்கான அர்ப்பணிப்பையும் இதன்போது மீள உறுதிப்படுத்தினார்.
இலங்கைக்கான சீன தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் ஃபூ சியாவோ, பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் சுமூகமாக ஆராய்ந்தனர்.
இதன்போது, இலங்கை ஆயுதப் படைகளின் இராணுவப் பயிற்சி மற்றும் தொழில்முறை திறன் மேம்பாட்டிற்கு சீனா நீண்டகாலமாக வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு பாதுகாப்பு பிரதியமைச்சர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். மேலும், நில அடிப்படையிலான படை நிலைப்பாட்டிலிருந்து கடல்சார் கள விழிப்புணர்வை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை முன்னெடுத்து வரும் தற்போதைய மூலோபாய மாற்றத்தை விளக்கிய அவர், நாட்டின் நடுநிலையான அணிசேரா வெளிநாட்டுக் கொள்கைக்கான அர்ப்பணிப்பையும் இதன்போது மீள உறுதிப்படுத்தினார்.
இவ்விருதரப்பு பேச்சுவார்த்தையின் போது எதிர்கால ஒத்துழைப்புக்கான முக்கிய துறைகளாக போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் மற்றும் மனிதக் கடத்தலை எதிர்கொள்ளும் கடல்சார் பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, பயிற்சி மற்றும் ஒப்புருவாக்க நிகழ்ச்சிகள், அத்துடன் அனர்த்த முகாமைத்துவம் ஆகியன இரு தரப்பினராலும் அடையாளம் காணப்பட்டன. இச்சந்திப்பில் சீனத் தூதரகத்தின் பிரதிப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் கடற்படை ஆலோசகர் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.





