அரசியலமைப்பு திருத்தம் குறித்த நகர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் பல்வேறு பொய்ப் பிரசாரம்: அமைச்சர் நளிந்த
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய பாராளுமன்றம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசியலமைப்பு திருத்தம் குறித்த நகர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் பல்வேறு பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தச் சட்டமூலம் தொடர்பான எந்தவொரு திருத்தத்திற்கும் அரசாங்கம் தயாராகவே உள்ளது. அரசியலமைப்பிற்கு உட்பட்ட முறையில் முன்னெடுக்கப்படும் இந்தச் சீர்திருத்தங்களை எவர் வேண்டுமானாலும் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தலாம்; உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய பாராளுமன்றம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
13-08-2026அன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நீதித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: நாட்டின் நீதிமன்றங்களில் பல வருடங்களாகத் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவுபடுத்தி மக்களுக்குச் விரைவாக நீதியைப் பெற்றுத் தருவதற்காகவே நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த 2024 ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களின் போது தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவுபடுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தோம். அந்த வகையில் நீதித் துறையில் முன்னெடுக்கப்படும் ஒட்டுமொத்த சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகவே சுமார் 400 நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 2 ஆண்டுகள் உயர்த்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நீதிபதியை மட்டும் இலக்கு வைத்துச் செய்யப்படும் மாற்றமல்ல.
இந்தத் திருத்தம் தொடர்பில் முப்பீட மகாநாயக்க தேரர்கள், கர்தினால், ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் இந்து மதத் தலைவர்கள் என அனைத்து மதத் தலைவர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இந்த நிலமையைச் சரியாகப் புரிந்து கொண்டுள்ளனர். அனுபவமிக்க நீதிபதிகளின் சேவையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச அளவிலும் பின்பற்றப்படும் நடைமுறையே இதுவாகும்.
அத்துடன் வழக்குத் தாமதத்தைக் குறைக்க நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது மட்டுமன்றி, இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம், சிறைச்சாலைகள், சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட அனைத்துக் கட்டமைப்புகளையும் டிஜிட்டல் மயமாக்கி, வெற்றிடங்களை நிரப்பவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அரசாங்கத்தின் இந்த நகர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் பல்வேறு பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தச் சட்டமூலம் தொடர்பான எந்தவொரு திருத்தத்திற்கும் அரசாங்கம் தயாராகவே உள்ளது. அரசியலமைப்பிற்கு உட்பட்ட முறையில் முன்னெடுக்கப்படும் இந்தச் சீர்திருத்தங்களை எவர் வேண்டுமானாலும் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தலாம்; உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய பாராளுமன்றம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்றார்.





