இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் திட்டம் வெற்றியடைந்துள்ளது; ரோசமண்ட் பைக்
எஞ்சியுள்ள 20.8 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு மிகவும் சிக்கலான மற்றும் கடினமான பகுதியாகும்.
இலங்கையில் கண்ணிவெடிகள் காணப்பட்ட பகுதிகளில் 90 சதவீதமளவில் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 20.8 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு மிகவும் சிக்கலான மற்றும் கடினமான பகுதியாகும். அடுத்த 4 ஆண்டுகளுக்குள் இலங்கையை முழுமையாகக் கண்ணிவெடிகள் அற்ற நாடாக அறிவிக்க எதிர்பார்க்கப்படுகிறது என உலகப்புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையும் கண்ணிவெடி அகற்றும் சர்வதேச தூதுவருமான ரோசமண்ட் பைக் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளார்.
உலகப்புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையும் கண்ணிவெடி அகற்றும் சர்வதேச தூதுவருமான ரோசமண்ட் பைக் 10-08-2026 அன்று அமைச்சின் காரியாலயத்தில் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்கவை சந்தித்து சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.
இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் பணியின் முன்னேற்றம் குறித்து ரோசமண்ட் வினவியதுடன், சர்வதேச தரத்திற்கு அமைய மேற்கொள்ளப்படும் இச்செயற்பாடுகள் குறித்து தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, தற்போது இலங்கையில் கண்ணிவெடிகள் காணப்பட்ட பகுதிகளில் 90 சதவீதமளவில் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 20.8 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு மிகவும் சிக்கலான மற்றும் கடினமான பகுதியாகும். அடுத்த 4 ஆண்டுகளுக்குள் இலங்கையை முழுமையாகக் கண்ணிவெடிகள் அற்ற நாடாக அறிவிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக இலங்கை இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற 500 படையினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய துறைகளைத் தவிர்த்து, இராணுவத்தினரால் மட்டும் ஆண்டிற்கு 1.5 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை விடுவிப்பதே அவர்களின் இலக்காகும். இதற்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதித் தொகை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது வெறும் கண்ணிவெடிகளை அகற்றுவது மட்டுமல்லாமல்,வடக்கு மற்றும் கிழக்கை அபிவிருத்தி செய்து, சுற்றுலாத்துறையை மேம்படுத்தி, சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து மக்களிடையேயும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் ஒரு உன்னதமான தேசிய பணியாகும் என்றார்.





