முன்னாள் அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான வழக்கு; நவம்பர் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
சாட்சிகள்அடிப்படையிலேயே வழக்கு மேலதிக விசாரணைக்காக நவம்பர் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
லங்கா உர நிறுவனத்தில் பணியாற்றியக் காலப்பகுதியில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மேலதிக சாட்சி விசாரணைகளுக்காக எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி வழக்கு 05-10-2026 அன்று மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டப் போதே அவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்தார்.
வழக்கு விசாரணைக்க எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளின் நெறிப்படுத்தலின் கீழ் முறைப்பாட்டாளர்களின் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பிரதிவாதி தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணியின் குறுக்கு விசாரணைக்குப் பின்னர் சாட்சிகள் பதிலளித்தனர். இதன் அடிப்படையிலேயே வழக்கு மேலதிக விசாரணைக்காக நவம்பர் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் குமார ஜயக்கொடி, கடந்த 2014 ஆம் ஆண்டு லங்கா உர நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராகக் கடமையாற்றிய காலப்பகுதியில், குறித்த உர நிறுவன வளாகத்தில் கார்பெட் இடும் ஒப்பந்தத்தை தனியார் நிறுவனமொன்றுக்குச் சாதகமான முறையில் மேற்கொண்டு அரசாங்கத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.





