பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய தரமற்ற மிளகாய் கொள்கலன்களை விடுவிக்க அரசாங்கம் மறுப்பு
மிளகாய் கொள்கலன்களில் கணிசமான பகுதி தரமற்றவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. எக்காரணம் கொண்டும் அவை உள்ளுர்ச் சந்தைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது.
உள்நாட்டு சந்தையில் நிலவும் விலை உயர்வு அழுத்தங்களை குறைப்பதற்காக மாத்திரம், நுகர்வோரின் ஆரோக்கியத்தில் சமரசம் செய்துகொண்டு தரமற்ற உணவுப் பொருட்களைச் சந்தைக்குள் அனுமதிக்கப் போவதில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதற்கமைய, துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 120 கொள்கலன்களில், தரம் மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளைப் பூர்த்தி செய்யத் தவறிய இறக்குமதி செய்யப்பட்ட காய்ந்த மிளகாய் தொகைகளை விடுவிப்பதைத் தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிக்கையில், ஒழுங்குமுறை தேவைகளைப் பூர்த்தி செய்யாத இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொதிகளுக்கு இலங்கை தர நிர்ணய நிறுவனமோ அல்லது சுகாதார அமைச்சோ ஒருபோதும் அனுமதி வழங்காது. துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மிளகாய் கொள்கலன்களில் கணிசமான பகுதி தரமற்றவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. எக்காரணம் கொண்டும் அவை உள்ளுர்ச் சந்தைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது.
தரமற்ற உணவுக் கொள்கலன்களைச் சுங்கத்தில் தடுத்து வைப்பது புதிய நடைமுறையல்ல் அது கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்தச் சட்டங்களை அமல்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.





