சஷீந்திர ராஜபக்ஷ உட்பட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான உத்தரவு
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உட்பட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள தொடர்பில், பிரதிவாதிகள் தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள பூர்வாங்க ஆட்சேபனைகள் மீதான உத்தரவு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இழப்பீட்டுக்கான அலுவலகத்தில் கடமையாற்றிய சில அரச அதிகாரிகளுக்குத் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி 8.85 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்டதன் மூலம் 'ஊழல்' எனும் குற்றத்தைச் செய்தமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் முன்னாள் பணிப்பாளர் சேபாலிகா சமன் குமாரி மற்றும் மகாவலி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கீர்த்தி பண்டார கொடகம ஆகியோர் இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
வழக்கு விசாரணையின் போது, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளான அஸ்திக தேவேந்திர, சமிந்த அதுகோரள மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பிரேமரத்ன ஆகியோர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் பூர்வாங்க ஆட்சேபனைகளை எழுப்பினர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான உதவிப் பணிப்பாளர் நாயகம் சுபாஷினி சிறிவர்தன சமர்ப்பணங்களை மேற்கொண்டார்.
இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான செவனகல, கிரிஹிப்பேன்வெவ பகுதியில் உள்ள நிலத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருந்த கட்டிடம் உட்பட சொத்துக்கள்,2022.05. 09 ஆம் திகதி ஏற்பட்ட வன்முறைகளின் போது சேதமடைந்திருந்தன.
குறிப்பிட்ட சொத்துக்கான இழப்பீடு வழங்குவது உத்தியோகபூர்வமாக நிராகரிக்கப்பட்டிருந்த பின்னணியில், அதற்கு முரணாக இழப்பீட்டுக்கான அலுவலகத்தில் கடமையாற்றிய சில அரச அதிகாரிகளுக்குத் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி செல்வாக்குச் செலுத்தி, 8.85 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்டதன் மூலம் 'ஊழல்' எனும் குற்றத்தைச் செய்தமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பிரதிவாதிகளுக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.





