இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வருகிறார்
இந்தியாவின் அயல் நாட்டுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் பிராந்திய வளர்ச்சி சார்ந்த 'மகாசாகர்' தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக இந்த விஜயம் அமைகின்றது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று செவ்வாய்கிழமை இலங்கை வரவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் கடல்சார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமையவுள்ளது.
நாளை மறுதினம் வியாழக்கிழமை வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த விஜயத்தின் போது, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கையின் உயர்மட்டத் தலைவர்களுடன் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன், கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினருடனும் கலந்துரையாடவுள்ளார். இந்திய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்ட குழுவொன்றும் இந்த விஜயத்தில் பங்கேற்கின்றது.
இந்தியாவும் இலங்கையும் நீண்டகால நாகரிகத் தொடர்புகளையும், பிராந்திய பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்ட பன்முகக் கூட்டாண்மையையும் பகிர்ந்து கொள்கின்றன. இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போதும், 2025 ஆம் ஆண்டு ஏற்பட்ட தித்வா புயல் பாதிப்பின் போதும் இந்தியா உடனடியாக முன்வந்து வழங்கிய உதவிகள் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அயல் நாட்டுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் பிராந்திய வளர்ச்சி சார்ந்த 'மகாசாகர்' தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக இந்த விஜயம் அமைகின்றது. இந்த விஜயம், பரஸ்பர நன்மை பயக்கும் துறைகளில், குறிப்பாக கடல்சார் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் இருநாடுகளுக்கு இடையிலான பாரம்பரிய நட்புறவை மேலும் ஆழப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





