எதிர்க்கட்சித்தலைவரின் உயிர்த்த தின வாழ்த்துச் செய்தி
அந்த கொடூரமான தாக்குதலால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி வழங்குவதும் உண்மையை வெளிக்கொணர்வதும் நமது அரசியல் அமைப்புக்கு உரிய இன்றியமையாத பொறுப்பும் கடமையும் ஆகும்.
உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத்தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதும், உண்மையை வெளிக்கொணர்வதும் தட்டிக்கழிக்க முடியாத கடமையாகும். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற கொடூரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீதி வழங்கப்படாமை ஒரு நாடாக நாம் அடைந்த பெரும் தோல்வி என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட செய்தியிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் வெளியிட்டுள்ள அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உயிர்த்த ஞாயிறு தினம் என்பது நம்பிக்கை, மீண்டும் எழுச்சியடைதல் மற்றும் ஒரு சமூகமாக புதிய தொடக்கம் குறித்து நமக்கு நினைவூட்டும் புனிதமான தருணமாகும். இந்த ஆசீர்வாதம் நிறைந்த நாளில், இலங்கை மக்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவிக்க கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை மகிழ்ச்சியான ஒன்றாக கருதுகிறேன்.
புதிய நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் முன்னிறுத்தி உயிர்த்த ஞாயிறு தினம் அனுஷ்டிக்கப்படும் இவ்வேளையில், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்றதொரு உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டின் தேவாலயங்கள் மற்றும் சில விடுதிகளை இலக்குவைத்து நடத்தப்பட்ட கொடூரமான தற்கொலை குண்டு தாக்குதலின் வலிமிகுந்த நினைவு இன்னும் நம் இதயங்களில் தங்கியிருக்கிறது.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த அந்த பேரழிவுகரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும், தம் அன்புடையோரை இழந்தவர்களுக்கும் இன்றுவரை நீதி வழங்க முன்னைய அரசாங்கத்தாலும் இன்றைய அரசாங்கத்தாலும் இயலவில்லை என்பது ஒரு நாடாக நாம் அடைந்த மாபெரும் தோல்வியாக கருதுகிறேன்.
அந்த கொடூரமான தாக்குதலால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி வழங்குவதும் உண்மையை வெளிக்கொணர்வதும் நமது அரசியல் அமைப்புக்கு உரிய இன்றியமையாத பொறுப்பும் கடமையும் ஆகும். இந்தப் பொறுப்பிலிருந்தும் கடமையிலிருந்தும் நம்மில் எவரும் விலகிக்கொள்ள இயலாது.
அதற்காக சட்டத்தின் ஆட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை இடையறாது பேணிக்காப்பது மிகவும் முக்கியமானது என்பதை நாம் உணர்ந்திருக்க வேண்டும். இந்த விடயங்களில் ஆரம்பம் முதலே கொண்டிருக்கும் நிலைப்பாடு மாறாமல், இன்றும் அதனையே தொடர்கிறேன் என்பதை வலியுறுத்துகிறேன்.
நமது எதிர்காலத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அனைத்து இன, மத, சமூக மக்களையும் ஒன்றிணைத்து, நம்பிக்கையும் அமைதியும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவது நம் அனைவருடைய பொதுப் பொறுப்பாகும். அதன் மூலம் மீண்டும் ஒரு போதும் அத்தகைய துயரம் நிகழாதவாறு வலிமையான நாடொன்றையும் சமூகமொன்றையும் உருவாக்குவது நம் அனைவரின் பொறுப்பாகும்.
இந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில், நாம் பாதிக்கப்பட்டவர்களின் நினைவுக்கு மரியாதை செலுத்தி, நீதி, அமைதி மற்றும் ஒற்றுமைக்காக நம்மை அர்ப்பணித்துக்கொண்டு, உண்மையை வெளிக்கொணர எல்லோரும் ஒன்றிணைவோம் என்றுள்ளது.





