விநியோக செயன்முறையை உறுதிப்படுத்துமாறு கரு ஜயசூரிய அரசுக்கு ஆலோசனை
கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய கூட்டுத்தாக்குதலை அடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்திருக்கும் பின்னணியில், அதன் விளைவாக ஏற்பட்ட தாக்கங்கள் ஒட்டுமொத்த உலகையும் பாதித்துள்ளன.
உலகளாவிய விநியோக அழுத்தங்களின் தாக்கம் சமூகக் கிளர்ச்சியாக வெடிப்பதற்கு முன்னதாக, செயற்திறன் மிக்கதும், நேர்மையானதுமான விநியோக செயன்முறையை உறுதிப்படுத்துவதற்கு பொருத்தமான நிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகள் அடங்கிய உயர்மட்டக்குழுவை அரசாங்கம் நியமிக்கவேண்டும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய கூட்டுத்தாக்குதலை அடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்திருக்கும் பின்னணியில், அதன் விளைவாக ஏற்பட்ட தாக்கங்கள் ஒட்டுமொத்த உலகையும் பாதித்துள்ளன.
அப்பாதிப்புக்களின் ஓரங்கமாக இலங்கையிலும் எரிபொருள் விலைகள் பெருமளவினால் அதிகரிக்கப்பட்டிருப்பதுடன், அதன் விளைவாக உணவுப்பொருட்களின் விலைகளும் உயர்வடைந்துள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய, எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்வடைந்து, வாழ்க்கைச்செலவும் வெகுவாக அதிகரித்திருக்கும் நிலையில், இந்த நெருக்கடியின் அடுத்த பாதிப்பு உணவுப்பாதுகாப்பில் எதிரொலிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமாத்திரமன்றி விரைவில் பதுக்கல், இறக்குமதி இலாபப் போட்டி மற்றும் உரத்தட்டுப்பாடு போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும் என்றும், அதனைக் கையாள்வதற்கு முறையான உடனடி நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி, 'உலகளாவிய விநியோக அழுத்தங்களின் தாக்கம் சமூகக் கிளர்ச்சியாக வெடிப்பதற்கு முன்னதாக, செயற்திறன் மிக்கதும், நேர்மையானதுமான விநியோக செயன்முறையை உறுதிப்படுத்துவதற்கு பொருத்தமான நிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகள் அடங்கிய உயர்மட்டக்குழுவை அரசாங்கம் நியமிக்கவேண்டும்' எனவும் கரு ஜயசூரிய ஆலோசனை முன்வைத்துள்ளார்.





