ரில்வினுடன் ஜெய்சங்கர் சந்திப்பு
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு டில்லி சென்றுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினருக்கும், ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு 06-02-2026 அன்று இடம்பெற்றது.
அயலவர்களுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் விரிவான பிராந்திய பார்வைக்கு இணங்க, இந்தியா எப்போதும் இலங்கையின் உண்மையான மற்றும் நம்பிக்கைக்குரிய பங்காளியாக இருக்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு டில்லி சென்றுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினருக்கும், ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு 06-02-2026 அன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போதான கலந்துரையாடல் மிகவும் சுமூகமாகவும் ஆக்கபூர்வமாகவும் அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஆழமான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், சமூக நலத் திட்டங்களில் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளை ஆராய்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அண்மைய பொருளாதார நெருக்கடியின் போதும், தித்வா சூறாவளி பாதிப்பின் பின்னரும் டில்லி வழங்கிய உதவிகளைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவின் அயலவர்களுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் விரிவான பிராந்திய பார்வைக்கு இணங்க, இந்தியா எப்போதும் இலங்கையின் உண்மையான மற்றும் நம்பிக்கைக்குரிய பங்காளியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு ஒத்துழைப்பை ஆழமாக்கும் முயற்சிகள் தொடரும் நிலையில், அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நிலவும் தொடர்ச்சியான ஈடுபாட்டை இந்தச் சந்திப்பு பிரதிபலிப்பதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





