வரவு - செலவு திட்டம் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விசேட கலந்துரையாடல்
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கொழும்பிலுள்ள ஹோட்டலொன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
அரசாங்கத்தின் இரண்டாவது வரவுசெலவுத் திட்டம் குறித்தும், அதற்கு எதிர்க்கட்சியின் மூலோபாய எதிர்வினை குறித்தும் கலந்துரையாடுவதற்காக, அனைத்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் 06-11-2025 விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கொழும்பிலுள்ள ஹோட்டலொன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
நாட்டின் பொருளாதாரம், வரவுசெலவுத் திட்டம் மற்றும் நாட்டின் எதிர்காலப் பாதை குறித்து இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்ட விவாதத்துக்கு முன்னர், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கியமான தகவல்களையும், முக்கிய பேசுபொருட்களையும் வழங்குவதே இக்கூட்டத்தின் நோக்கமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போது இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதால், அவரது வழிகாட்டுதலின் கீழ் இந்தக் கூட்டம் நடைபெற்றது.. அனைத்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதற்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன், இங்கு அரசாங்கத்துக்கு எதிரான சதித்திட்டம் எதுவும் இடம்பெறவில்லை.
அரசாங்கத்தின் வரவு - செலவு திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையிலேயே நாம் பங்கேற்கின்றோம். ஆனால் அரசாங்கத்துக்குள் தீவிர பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
அநுராதபுரத்தில் கிடைக்கப் பெற்றுள்ள போதைப்பொருள் தொகை, 323 கொள்கலன்கள் தொடர்பிலேயே அவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த கொள்கலன் விவகாரம் தொடர்பில் இலஞ்சம், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் மூலம் அவற்றின் பின்னணியைக் கண்டறியுங்கள். எனவே வரவு - செலவு திட்டத்தை சமர்ப்பித்து அதன் பின்னர் சென்று இவற்றைத் தேடுங்கள். மாறாக அமைச்சரை மாற்றுவதில் எதுவும் நடக்கப் போவதில்லை. 21ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் நாம் பங்கேற்கப் போவதில்லை. ஆனால் பங்கேற்போருக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எமது தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஒவ்வொரு மேடைகளிலும் கூறியதைப் போன்று நிவாரணங்களை இந்த வரவு - செலவு திட்டத்தில் அரசாங்கம் மக்களுக்கு வழங்க வேண்டும்.
தற்போது தேசிய மக்கள் சக்தியுடன் தொடர்புடையவர்களும் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். தூய்மையான திசைக்காட்டிக்கு என்னவானது? எனவே அரசியல் கட்சி பேதமின்றி இந்த அரசாங்கத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் றோஹண பண்டார, தேசிய மக்கள் சக்தியின் இரண்டாவது வரவு - செலவு திட்டம் முன்வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு வரவு - செலவு திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படாத நிவாரணங்கள் இவ்வாண்டிலாவது வழங்கப்படும் என எதிர்பார்க்கின்றோம். அத்தோடு விவாதத்தின் போது முழுமையாக மக்களுக்காக குரல் கொடுப்போம்.
இம்முறையும் மக்கள் ஏமாற்றப்பட்டால், அவர்களையும் இணைத்துக் கொண்டு வீதிக்கிறங்கி போராடவும் தயாராகவுள்ளோம். போதைப்பொருள் ஒழிப்பினையும், பாதாள உலகக்குழு கட்டுப்படுத்தலையும் பிரசாரம் செய்து கொண்டு மக்களின் பிரச்சினைகளை மறைப்பதற்கான நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.





