தமிழர் தரப்புடன் பேச்சு நடத்துங்கள்: தமிழ்த்தலைவர்கள் வலியுறுத்து
நாட்டுமக்கள் அனைவருக்கும் பொதுவான சட்டமாக உருவாக்கப்பட்ட அரசியலமைப்புக்கள், பெரும்பாலும் பெரும்பான்மையினத்தவருக்கு சார்பானவையாகவே உருவாக்கப்பட்டன.
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், தமிழர்களுக்கான தீர்வாக எதனை முன்வைக்கப்போகிறார்கள் என்பது பற்றி முதலில் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தமிழர் தரப்புடன் பேசவேண்டும். இருப்பினும் மக்கள் விடுதலை முன்னணியின் கடந்தகால செயற்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் ஆக்கபூர்வமான நேர்மறை நகர்வுகளை எதிர்பார்க்கமுடியவில்லையென தமிழ்த்தலைவர்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான ஆரம்பகட்டப் பணிகளை இம்மாதம் மேற்கொள்வோம். நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வு காணப்படும். தமிழ் அரசியல் தரப்பினர் காலங்காலமாக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை விடுத்து, பொதுக்கொள்கையை அடிப்படையாகக்கொண்டு சிறந்த பரிந்துரைகளை முன்வைக்கவேண்டும் என அண்மையில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதுபற்றிக் கருத்துரைத்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன், கடந்த பல வருடகாலமாக பல்வேறு தரப்பினரால் பல வடிவங்களிலான தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டதாகவும், எனவே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், தமிழர்களுக்கான தீர்வாக எதனை முன்வைக்கப்போகிறார்கள் என்பது பற்றி முதலில் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தமிழர் தரப்புடன் பேசவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
'இதுவரையில் நாட்டை ஆட்சிசெய்த அரசாங்கங்கள் தமிழர்களின் தேவைப்பாடுகளையும், கரிசனைகளையும் காதுகொடுத்துக் கேட்கவில்லை. அதுமாத்திரமன்றி நாட்டுமக்கள் அனைவருக்கும் பொதுவான சட்டமாக உருவாக்கப்பட்ட அரசியலமைப்புக்கள், பெரும்பாலும் பெரும்பான்மையினத்தவருக்கு சார்பானவையாகவே உருவாக்கப்பட்டன.
எனவே அந்த அரசியல் கலாசாரத்தின் நீட்சியாக இம்முறை உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பும் தமிழர்களின் நலன்களைப் புறந்தள்ளி, அவர்களது அனுமதியின்றித்தான் கொண்டுவரப்படுமா என்ற கேள்வி தொக்குநிற்கிறது. அதுமாத்திரமன்றி நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு உள்ளடங்கலாக அரசாங்கம் அளித்த ஏனைய வாக்குறுதிகளும் இந்தப் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படுமா என்பது கேள்விக்குறியான விடயமே' என்றும் சுரேஷ் பிரேமசந்திரன் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் ஆக்கபூர்வமாக, நேர்மறையான விதத்தில் ஏதேனும் நடக்கும் எனத் தான் கருதவில்லை எனத் தெரிவித்த ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சியான புளொட் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தற்போது தேசிய மக்கள் சக்தியாக இயங்கிவரும் கட்சியின் அடிப்படையான மக்கள் விடுதலை முன்னணியின் கடந்தகால செயற்பாடுகளே தன்னை அவ்வாறு கருதத் தூண்டுவதாக குறிப்பிட்டார்.
சகல தரப்பினருடனும் வெளிப்படையான முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி, தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வுத்திட்டத்தை உள்வாங்கி, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் பட்சத்தில், அது பெரிதும் வரவேற்கத்தக்க விடயமாகும் எனக் கூறிய அவர், இருப்பினும் இக்காலப்பகுதியில் அவ்வாறானதொரு காரியம் நடைபெறும் எனத் தான் கருதவில்லை என்றார்.





