பிரதமர் ஹிரிணி அமரசூரியவுக்கு எதிரான தாக்குதல்களுக்கு புத்திஜீவிகள் கடும் கண்டனம்
பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு எதிரான இந்த மோசமான தாக்குதல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கு எதிராக கடந்த சில நாட்களாகத் தொடுக்கப்பட்டுவரும் பாலின அடிப்படையிலான தனிப்பட்ட தாக்குதல்கள் ஒரு ஜனநாயக சமூகத்தில் நிலவும் சிவில் மற்றும் அடிப்படை நாகரிகம் சார்ந்த எல்லைகளுக்கு அப்பால் சென்றிருப்பது குறித்து கூட்டாக தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் புத்திஜீவிகள், அதனை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
அண்மையில் பாடசாலைப் பாடப்புத்தகமொன்றில் நிகழ்ந்த தவறு பேசுபொருளானதை அடுத்து, கடந்த சில நாட்களாக பிரதமரும், கல்வியமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கு எதிராக சமூகவலைத்தளங்களிலும், பாராளுமன்றத்திலும், அரசியல் கட்சிகளின் ஊடக சந்திப்புக்களிலும் பாலின அடிப்படையிலான தனிப்பட்ட தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன.
இதனைக் கண்டித்து பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, கலாநிதி ராதிகா குமாரசுவாமி, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பேராசிரியர் பர்ஸானா ஹனீபா ஆகியோர் உள்ளடங்கலாக 58 புத்திஜீவிகள் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
நாட்டின் பிரதமரும் கல்வியமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரியவை இழிவுபடுத்துவதுடன் அவரது தனியுரிமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் மிகமோசமான பிரசாரம் குறித்து அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.
இந்த தாக்குதல்கள் ஒரு ஜனநாயக சமூகத்தில் நிலவும் சிவில் மற்றும் அடிப்படை நாகரிகம் சார்ந்த எல்லைகளுக்கு அப்பால் சென்றிருப்பது குறித்து நாம் மிகுந்த அதிர்ச்சி அடைவதுடன், எமது கரிசனையை வெளிப்படுத்துகின்றோம். அவற்றில் சில தாக்குதல்கள் அவர் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பெரிதும் மதிக்கப்படும் பெண் அரசியல் தலைவர் என்பதனால் உருவான பொறாமையினாலும், வெறுப்பினாலும் தூண்டப்பட்டவையாக இருக்கின்றன.
பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு எதிரான இந்த மோசமான தாக்குதல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்தோடு எமது சமூகத்தின் ஒடுக்குமுறைவாதிகளாலும், பிற்போக்குவாதிகளாலும் வேறு நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுக்கப்படும் பிரசாரங்களால் தவறான முறையில் வழிநடத்தப்படவேண்டாம் என நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என அக்கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை பிரதமருக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமக்கு ஹரினி அமரசூரியவுடன் பிரதமர் என்ற அடிப்படையில் மாத்திரமன்றி கல்வி அமைச்சர் என்ற ரீதியிலும் கொள்கை அடிப்படையிலான பல்வேறு முரண்பாடுகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் அவருக்கு எதிராகத் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத இழிவுபடுத்தல் பிரசாரத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





