தோட்டத் தொழிலாளர்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது - தலதா அத்துகோரள
மே தின கூட்டங்களை இணைந்து மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தியிடமிருந்து உத்தியோகபூர்மான அழைப்பு வரவில்லை.
அரசாங்கம் ஆட்சியை பெற்றுக்கொள்வதற்காக தெரிவித்துவந்த பொய்களை நியாயப்படுத்த மேற்கொண்டுவரும் நடவடிக்கையால் நாட்டின் அனைத்து துறைகளும் சிக்களுக்குள்ளாகி இருக்கின்றன. தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பும் 25நாட்கள் வேலை செய்தாலே வழங்கப்படுகிறது. எந்த தோட்டத்திலும் மாதத்துக்கு 25 நாட்கள் வேலை வழங்கப்படுவதில்லை. அதனால் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களையும் ஏமாற்றி இருக்கிறதென ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
சர்வதேச தொழிலாளர் தினமான எதிர்வரும் மே முதலாம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் தொழிலாளர் தின நிகழ்வு தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு 22-04-2026 அன்று கோட்டையில் அமைந்துள்ள தேசிய ஊழியர் சங்கத்தில் இடம்பெற்றது.
அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், பொய் பிரசாரம் மேற்கொண்டு மக்களை ஏமாற்றி இவ்வாறு எந்த எந்த கட்சியும் ஆட்சிக்கு வந்ததில்லை. ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவந்ததால் இது தொடர்பில் எங்களுக்கு பயப்படாமல் தெரிவிக்க முடியும். நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக ஐக்கிய தேசிய கட்சி எமது தலைவர்கள் மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் அனைவரும் தெரிந்தவிடயம்.
ஆனால் இவர்கள் முறைமாற்றம் ஒன்றை மேற்கொள்வதாக தெரிவித்து, தற்போது அனைத்தையும் சிக்கலுக்குள்ளாக்கி இருக்கிறார்கள். கல்வி மறுசீரமைப்பு மேற்கொள்வதாக தெரிவித்து, அதில் அச்சுப்புத்தகத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது. சுகாதாரத்துறையை எடுத்துக்கொண்டால் அதிலும் பிரச்சினை, பொலிஸை எடுத்துக்கொண்டால் அங்கு 30ஆயிரத்துக்கும் அதிகமான வெற்றிடம் காணப்படுகிறது. பொலிஸுக்கு ஆட்களை இணைத்துக்கொள்வதில்லை.
அதனால் அரசாங்கம் அனைத்து துறைகளையும் சிக்கலுக்குள்ளாக்கி இருக்கிறது. இவர்களின் பொய் பிரசாரமே இதற்கு காரணமாகும். தோட்டத் தொழிலாளர்களையும் இவர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள். கம்பனிகளுக்கு 200 ரூபா வழங்கி இருப்பது மக்களின் பணமாகும். அதுவும் 25 நாட்கள் வேலை செய்தாலே, அந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படுகிறது.
மாதத்துக்கு 25 நாட்கள் எந்த தோட்டத்தில் வேலை இருக்கிறது? நாங்கள் தோட்டம் வைத்திருப்பவர்கள். அதனால் இந்த விடயங்கள் எங்களுக்கு நன்கு தெரியும். அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தெரிவித்த பொய்யை நியாயப்படுத்தவே இதனை மேற்கொள்கிறார்கள்.இவர்களின் பொய்க்கு இன்று அளவே இல்லாமல் போயிருக்கிறது.
அதேநேரம் மே தின கூட்டங்களை இணைந்து மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தியிடமிருந்து உத்தியோகபூர்மான அழைப்பு வரவில்லை. அவ்வாறு அழைப்பு வந்தால், அது தொடர்பில் கட்சியின் செயற்குழு, தலைமைத்துவ சபை என்பனவற்றில் கலந்துரையாடியே தீர்மானிக்க வேண்டும். என்றாலும் மேதின நிகழ்வு தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி தற்போது தீர்மானத்தை எடுத்திருக்கிறது.
அதாவது, எதிவரும் மே முதலாம் திகதி வெசாக் தினம் என்பதால், அந்த தினத்துக்கு கெளரவமளிக்கும் வகையில் மே தினமன்று, எமது தேசிய சேவை சங்கத்தில் நீண்டகாலம் அங்கத்தவர்களாக இருந்து சேவை செய்தவர்களை கெளரவிக்கும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருக்கிறோம் என்றார்.





