திருக்கோவில், காரைதீவு பிரதேசங்கள் கடலரிப்பால் பெரிதும் பாதிப்பு: கோடீஸ்வரன் எம்.பி
தென்பகுதியில் கால நீடிப்புகள் வழங்கப்பட்டு பண்ணையாளர்களுக்கு நிவாரணங்களும் வழங்கப்பட்டுள்ள போதும், அம்பாறை மாவட்டத்தில் அவ்வாறு நிவாரணம் கிடைக்கவில்லை.
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் மற்றும் காரைதீவு பிரதேசங்கள் கடலரிப்பில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கண்ணுக்கு தெரியும் இந்த அனர்த்தங்களை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 21-01-2026 அன்று நடைபெற்ற தித்வா புயலின் பின்னரான நாட்டில் தற்போதைய நிலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், அம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பினால் சில பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திருக்கோவில், காரைதீவில் பிரதேசத்தில் 200, 300 மீற்றர் கரையோரப் பகுதி கடலரிப்பில் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மாளிகைக்காட்டில் ஜனஸாக்கள் கடலில் அள்ளுண்டு போகின்றன. இவ்வாறான இடத்தைக்கூட பாதுகாக்க முடியாத நிலையில் இருக்கின்றோம். கண்ணுக்கு முன்னால் நடக்கும் அனர்த்தங்களை தடுக்க வேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்
அதேவேளை, தித்வா நாட்டில் மிகவும் பாதிப்புகளை ஏற்படுத்திய அனர்த்தமாக விளங்கியது. அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களிலும் இந்த அனர்த்தம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அனர்த்தத்தின் பின்னர் 10 நாட்கள் வரையில் மின்சாரம் தடைப்பட்டும், தொலைத் தொடர்புகள் இன்றியும், வீதிகள் போக்குவரத்து செய்ய முடியாத நிலையுமே இருந்தது. இந்த நேரத்தில் அனர்த்தத்தை தெரிவிப்பதற்கு எவ்வித வசதிவாய்ப்புகளும் இருக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக அனர்த்தம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க முடியாத நிலவியது. ஆனால் அந்த அதிகாரிகளினால் குறிப்பிட்ட காலக்கெடு விதிக்கப்பட்டு, அதற்குள் அனர்த்தம் தொடர்பில் அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் பண்ணையாளர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். பண்ணைகளில் மாடுகள் இறந்திருந்த நிலையைில் அவர்களுக்கு அது தொடர்பில் மிருக வைத்தியர் அல்லது அதிகாரிகளுக்கு அறிவிக்க வசதிகள் இருக்கவில்லை. இவ்வாறான நிலைமையில் அந்த மக்களுக்கு இதுவரையில் இழப்பீடுகள் கொடுக்கப்படவில்லை. ஆனால் தென்பகுதியில் கால நீடிப்புகள் வழங்கப்பட்டு பண்ணையாளர்களுக்கு நிவாரணங்களும் வழங்கப்பட்டுள்ள போதும், அம்பாறை மாவட்டத்தில் அவ்வாறு நிவாரணம் கிடைக்கவில்லை.
வீடுகள் பாதிக்கப்பட்டிருந்த போது அதனை புகைப்படம் எடுத்திருந்தீர்களா என்று அதிகாரிகள் கேட்கின்றனர். ஆனால் அந்த நேரத்தில் மின்சார வசதி, தொலைத் தொடர்பு வசதிகள் இல்லாத நிலைமையே காணப்பட்டது. இதனால் இந்த நிலைமையை கருத்திற்கொண்டு அந்த மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.





