பலஸ்தீனத்திலிருந்து செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதற்கு சுதந்திர ஊடகவியலாளர்கள் இயக்கம் கண்டனம்
காசாவில் நடைபெற்றுவரும் பலஸ்தீன இனப்படுகொலை பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்திய சக ஊடகவியலாளர்களை நாம் வணங்குகிறோம்.
காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களை நசுக்குவதற்காக, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், பலஸ்தீனத்திலிருந்து செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுதந்திர ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
காசா நகரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அல் ஜசீராவுக்கு செய்தி வழங்கும் ஐந்து ஊடகவியலாளர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். உலகப்புகழ்பெற்ற நிருபர் அனஸ் அல்-ஷெரிஃப்பும் கொல்லப்பட்டவர்களில் ஒருவராவார். அவரும் அவரது ஊடகவியலாளர்கள் குழுவும் அல்-சிஃபா மருத்துவமனைக்கு அருகிலுள்ள கூடாரமொன்றில் தங்கியிருந்தபோது இலக்குவைக்கப்பட்ட ட்ரோன் தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டனர். அதன் அடிப்படையில் இது திட்டமிட்டதொரு கொடூரமான தாக்குதல் என்பது புலப்படுகிறது.
காசாவில் நடைபெற்றுவரும் பலஸ்தீன இனப்படுகொலை பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்திய சக ஊடகவியலாளர்களை நாம் வணங்குகிறோம். அவர்களின் இழப்பிற்கு நாங்கள் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களை நசுக்குவதற்காக, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், பலஸ்தீனத்திலிருந்து செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பின் அறிக்கைகளின்படி, 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் பலஸ்தீனத்தில் 186 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பி.பி.சி, ஏ.பி மற்றும் ஏ.எஃப்.பி ஆகிய சர்வதேச செய்திச்சேவைகள் தங்கள் நிருபர்கள் எதிர்கொள்ளும் கடுமையான கஷ்டங்களை எடுத்துரைத்து ஒரு கூட்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளன. அவர்களிடம் உயிர்வாழ போதுமான உணவு கூட இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளன. பி.பி.சி அதன் மூன்று செய்தியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பல நாட்களாக பட்டினியில் வாடுவதாக ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
பலஸ்தீன இனப்படுகொலையின்போது இஸ்ரேலிய அரசாங்கம் தொடங்கிய ஊடக அடக்குமுறையின் உண்மையான தன்மை இதுதான். ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்ய அல்லது பயங்கரவாதத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டிய உண்மையான தேவைக்கு அப்பாற்பட்ட இந்தப் படுகொலைகளையும், அதனால் பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களின் குரல்களை நசுக்கப் பயன்படுத்தப்படும் ஊடக அடக்குமுறையையும் கண்டிப்பதில எங்களுடன் உன்றிணையுமாறு ஒட்டுமொத்த உலக சமுதாயத்தினரையும் நாங்கள் கோருகின்றோம் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





