திட்டமிட்டபடி 6000 வைத்தியர்களுக்கான வருடாந்த இடமாற்றங்கள் வழங்கப்படும் - அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு
பெரும்பாலான வைத்தியர்கள் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் ஒரு குறுகிய குழு மாத்திரமே இதனை எதிர்க்கின்றது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிடுவதைப் போன்று எவ்வித சட்டவிரோதமான இடமாற்றங்களும் வழங்கப்படவில்லை. திட்டமிட்டபடி எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி சுமார் 6000 வைத்தியர்களுக்கான வருடாந்த இடமாற்றங்கள் வழங்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்தார். நாடு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்படும் வேலைநிறுத்தங்கள் நியாயமற்றவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 31-03-2026 அன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிடுவதைப் போன்று எவ்வித சட்டவிரோத இடமாற்றங்களும் வழங்கப்படவில்லை. வருடாந்த இ;டமாற்றத்துக்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மே 10ஆம் திகதி சுமார் 6000 வைத்தியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. பெப்ரவரி முதலாம் வாரத்திலிருந்து இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இவ்வாறு முறையான இடமாற்ற செயற்பாடுகள் கடந்த 13 ஆண்டுகளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னெடுக்கப்படவில்லை. இடமாற்ற சபையிலிருந்தவர்கள் கூட பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஒரே இடத்தில் சேவையாற்றியுள்ளனர். இவ்வாறான அநீதிகளைத் தவிர்ப்பதற்காகவே தற்போது ஒழுங்குமுறையில் இடமாற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பெரும்பாலான வைத்தியர்கள் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் ஒரு குறுகிய குழு மாத்திரமே இதனை எதிர்க்கின்றது. பின்தங்கிய பிரதேசங்களுக்கான இடமாற்ற பணிகளை முன்னெடுப்பது சுகாதார அமைச்சினூடாகவே ஆகும். அதில் தொழிற்சங்கங்களால் தலையிட முடியாது. அழுத்தம் பிரயோகிக்கவும் முடியாது.
எனவே அரசாங்கத்தின் தீர்மானத்துக்கமைய புதிய வைத்தியர்களுக்கான நியமனங்களும், ஏனையோருக்கான இடமாற்றங்களும் வழங்கப்படும். அதில் எவ்வித மாற்றமும் இல்லை. நாடு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு வேலை நிறுத்தங்களில் ஈடுபடுவது நியாயமற்றது. இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்றார்.





