ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ இலங்கை வருகை
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடனும் இக்குழுவினர் கலந்துரையாட உள்ளனர்.
ரஷ்ய குடியரசின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தலைமையிலான ஏழு பேர் கொண்ட உயர்மட்டத் தூதுக்குழுவினர், மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக 03-05-2026 அன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விமான நிலையத்தின் விசேட விருந்தினர் வரவேற்பு முனையத்தில் இவர்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன, இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஜகார்யன், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மற்றும் பணிப்பாளர் வைத்தியர் அனில் சமரநாயக்க ஆகியோர் வரவேற்றனர்.
சுகாதாரத் துறை ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள்
இந்த விஜயத்தின் போது, இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான சுகாதாரத் துறை உறவுகளை வலுப்படுத்துவது குறித்து, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. அத்துடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடனும் இக்குழுவினர் கலந்துரையாட உள்ளனர்.
தமது விஜயத்தின் இரண்டாம் நாளான இன்று (4), ரஷ்ய தூதுக்குழுவினர் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றைப் பார்வையிடவுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இரு நாட்டு சுகாதார அமைச்சுகளுக்கும் இடையே புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கையெழுத்திடப்படவுள்ளன.
மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ நிபுணர்களுக்கான உயர்தரப் பயிற்சிகள், கல்விசார் ஒத்துழைப்புகள், ஆயுர்வேத மருத்துவத் துறை மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளது. ரஷ்ய தூதுக்குழுவினர் தமது பயணத்தை நிறைவு செய்து மே 5 ஆம் திகதி நாடு திரும்ப உள்ளனர்.





