பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கான சுற்றுநிரூபத்தை சவாலுக்கு உட்படுத்திய அடிப்படை உரிமை மனு விசாரணை இன்றி தள்ளுபடி
குறித்த மனு, 20-07-2026 அன்று உயர் நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
உயிரியல் அடிப்படையின்றி அறுவைசிகிச்சைகள் மூலம் பாலினத்தை மாற்றிக்கொள்வதற்கு அனுமதியளிக்கும் சுற்றுநிரூபங்கள் மற்றும் சட்டமூலங்களை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலங்கை விமானப் படையின் ஓய்வுபெற்ற மாற்றுத்திறனாளி அதிகாரியான சாந்த ஜயதிலக என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
குறித்த மனு, 20-07-2026 அன்று உயர் நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மன்றில் முன்னிலையான மனுதாரர் விளக்கமளிக்கையில், 2015 ஆம் ஆண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்தின்படி, மனநல வைத்தியரின் பரிந்துரையின் பேரில் அறுவை சிகிச்சை மூலம் பாலின அடையாளத்தை மாற்றுவதும், அதற்கேற்ப புதிய பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை அரசாங்கம் வழங்குவதும் சட்டத்துக்குப் புறம்பானது என்றார்.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன், "அரசியலமைப்பின் படி அடிப்படை உரிமை மனுவொன்றை ஒரு மாத காலத்திற்குள்ளேயே தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், மனுதாரர் 2015 முதல் 2024 வரை வெளியிடப்பட்ட சுற்றுநிரூபங்களை 2026 ஆண்டிலேயே சவாலுக்கு உட்படுத்தியுள்ளார். எனவே, இம்மனு காலாவதியானது," எனக் கூறி இதனைத் தள்ளுபடி செய்யுமாறு நீதிமன்றில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.
அதேநேரம், இடையீட்டு மனுதாரர்களான கலாநிதி ராதிகா குமாரசுவாமி உள்ளிட்டோர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன மன்றில் விடயங்களை முன்வைக்கையில், பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்கப் பெண்கள் வலுவூட்டல் சட்டத்தை இரத்து செய்யக் கோருவது மக்கள் இறைமைக்கு முரணானது என சுட்டிக்காட்டினார். பெண்கள் ஊடக கூட்டமைப்பு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை தனிப்பட்ட ரீதியில் பிரதிவாதியாக பெயரிட்டது அரசியலமைப்பின் 35 ஆவது பிரிவின் கீழ் தவறு என்றும், சட்டமா அதிபர் ஊடாகவே ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.
மனுதாரரால் தனது அடிப்படை உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டுள்ளன என்பதை நீதிமன்றில் திட்டவட்டமாக விளக்கத் தவறியதை அடுத்து, இடையீட்டு மனுதாரர்களின் ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் அமர்வு, மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.





