கிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து கனேடிய, பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களிடம் எடுத்துரைத்த செயற்பாட்டாளர்
கனேடிய மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களுக்கும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளரான ச.சிவயோகநாதனுக்கும் இடையிலான சந்திப்பு மட்டக்களப்பு பாசிக்குடாவில் உள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் கனேடிய மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களிடம் விளக்கமளித்துள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதன், அரசாங்கத்தின் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படவேண்டிய விடயங்கள் அடங்கிய மனுவொன்றையும் கையளித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இஸபெல் கத்ரின் மார்ட்டின் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் ஆகியோர் அங்கு பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்தியிருந்தனர்.
அதற்கமைய கனேடிய மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களுக்கும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளரான ச.சிவயோகநாதனுக்கும் இடையிலான சந்திப்பு 05-05-2026 அன்று மட்டக்களப்பு பாசிக்குடாவில் உள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் பிரச்சினை, அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக நிறுவப்பட்டுவரும் பண்ணையாளர் சங்கங்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதிப்பொறிமுறை, அரச திணைக்களங்கள் மூலமான காணி ஆக்கிரமிப்பு, அரசாங்கத்தினால் முன்னெடுக்க்பபட்டுவரும் சர்ச்சைக்குரிய பிரஜாசக்தி செயற்திட்டம் மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு இவ்விடயங்கள் மற்றும் அரசாங்கத்தின்மீது பிரயோகிக்கப்படவேண்டிய அழுத்தங்கள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவும் உயர்ஸ்தானிகர்களிடம் கையளிக்கப்பட்டது.





