வரலாற்றை இளம் தலைமுறைக்கு கடத்துவதன் ஊடாகவே நல்லிணக்கத்தை கட்டியெழுப்பமுடியும்
பல்வேறு புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சி 13-02-2026 அன்று கொழும்பில் நடைபெற்றதுடன், 14-02-2026 அன்று அதுபற்றிய கலந்துரையாடல் நிகழ்வொன்றும் இடம்பெற்றது.
வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 35, ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில், இத்தகைய வரலாறுகள் தொடர்பில் தற்போதைய தலைமுறையினருக்கு தெளிவுபடுத்துவதன் ஊடாக மாத்திரமே இனங்களுக்கு இடையிலான பரஸ்பட புரிதலை ஏற்படுத்தவும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பவும் முடியும் என புத்திஜீவிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கூட்டாக வலியுறுத்தினர்.
வடக்கு முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் பூர்த்தியடைவதை நினைவுகூரும் வகையில், அவ்வெளியேற்றத்தின் பின்னரான சிதைவுகள், வெளியேறிய மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையிலான நினைவுச்சின்னங்கள், பாதிக்கப்பட்ட நபர்கள் என பல்வேறு புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சி 13-02-2026 அன்று கொழும்பில் நடைபெற்றதுடன், 14-02-2026 அன்று அதுபற்றிய கலந்துரையாடல் நிகழ்வொன்றும் இடம்பெற்றது.
வடக்கு முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியேற்றப்பட்டு 35 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு, கிராமிய அபிவிருத்தி நிலையம், சிறுபான்மையினருக்கான கூட்டிணைவு, சிஸ்டர்ஹுட் இனிஸியேட்டிவ் மற்றும் செல்வநாயகம் ஞாபகார்த்த நிதியம் என்பவற்றின் கூட்டிணைந்த முயற்சியில், 23 தன்னார்வலர்களால் வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்துடன் தொடர்புடைய 120 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் திரட்டப்பட்டு, அவற்றிலிருந்து கண்காட்சியில் காட்சிப்படுத்துவதற்காக 70 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் தெரிவுசெய்யப்பட்டன.
அவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்ட தொடர் கண்காட்சிகள் மற்றும் அதுசார்ந்த கலந்துரையாடல்கள் கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய 5 மாவட்டங்களில் நடாத்தப்பட்டன.
இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான தலைமுறைகள் மற்றும் சமூகங்களை இணைப்பதற்கு ஏதுவான உரையாடலை உருவாக்கும் நோக்கில்
6 ஆவதாக கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கண்காட்சியின் ஓரங்கமாக நேற்றைய தினம் காலை 10.00 மணிக்கு 'நினைவுகள், உரிமைகள் மற்றும் கண்ணியத்தை மீட்டல்' எனும் தலைப்பில் சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கத்தினால் தொகுத்தளிக்கப்பட்ட கலந்துரையாடல் நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பர்ஸானா ஹனீபா, சிவில் செயற்பாட்டாளர் இளங்கோவன், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் மிராக் ரஹீம் மற்றும் சட்டத்தரணி அமீர் பாயிஸ் ஆகியோர் கலந்துகொண்டு வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் எனும் துன்பியல் சம்பவம் அணுகப்படவேண்டிய விதம், அவ்வாறு வெளியேறிய மக்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தரவுகள் திரட்டப்படவேண்டியதன் அவசியம், அம்மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான சாத்தியப்பாடு, அம்மக்களது காணி உரிமை மற்றும் இழப்பீடு உள்ளிட்ட விடயங்கள் குறித்துப் பேசவேண்டியதன் தேவைப்பாடு என்பன பற்றி ஆழமான கருத்துக்களை முன்வைத்தனர்.
குறிப்பாக இச்சம்பவத்தை வெளியேற்றம், இனச்சுத்திகரிப்பு, இடப்பெயர்வு, கட்டாய இடப்பெயர்வு என ஒவ்வொரு சொற்பதங்களின் ஊடாக அடையாளப்படுத்துவதில் உள்ள நியாயபூர்வமற்ற தன்மை, இவ்வெளியேற்றம் முஸ்லிம்களின் நன்மைக்காகவே மேற்கொள்ளப்பட்டது எனக்கூறி நியாயப்படுத்துவதிலும், அதுவும் ஒரு மீறல் என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பதிலும் நிலவும் புரிதலின்மை, கிழக்கில் இடம்பெற்ற கொலைகளின் விளைவாகவே வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதாகக்கூறி ஒரு தவறை பிறிதொரு தவறின் ஊடாக நியாயப்படுத்த முற்படல் உள்ளிட்ட விடயங்கள் பற்றி சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் கடந்தகால வரலாற்றை இவ்வாறான கண்காட்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் தற்போதைய தலைமுறையினருக்கு தெளிவுபடுத்துவதன் ஊடாக மாத்திரமே இனங்களுக்கு இடையிலான பரஸ்பட புரிதலை ஏற்படுத்தவும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பவும் முடியும் என வலியுறுத்தப்பட்டது.





