மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விரைவில் அமைதி ஏற்பட வேண்டும் -ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
குறிப்பாக வலுசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா துறைக்கும் அந்நாடுகள் வழங்கும் பங்களிப்பையும் பாராட்டுகின்றோம்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விரைவில் அமைதி ஏற்படுவது இலங்கையின் எதிர்பார்ப்பாகும். போரில் சம்பந்தப்படாத மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் கவலைக்குரியவை. அத்தகைய தாக்குதல்களை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள அரபு நாட்டுத் தூதுவர்களின் கவுன்சில் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
போர்ச் சூழலால் மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் மற்றும் குறிப்பாக அந்த நாடுகளின் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து தூதுவர்கள் இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.
இதன் போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் இலங்கைக்கு வழங்கி வரும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது. குறிப்பாக வலுசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா துறைக்கும் அந்நாடுகள் வழங்கும் பங்களிப்பையும் பாராட்டுகின்றோம்.
மத்திய கிழக்கு நாடுகளில் அதிகளவிலான இலங்கைத் தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், தற்போது நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தி செயற்படுவது தொடர்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதேபோன்று, மத்திய கிழக்கு பிராந்திய நாடுகளின் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்காக தனி நாடாகவும், ஒன்றிணைந்தும், சர்வதேச சட்டங்களுக்கு இணங்க இலங்கை வழங்கக்கூடிய அதிகப்பட்ச ஒத்துழைப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.





