தெல்தெனியவில் பெண் உடலியல் மருத்துவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் - சந்தேக நபர்கள் மூவருக்கும் 48மணிநேரம் தடுப்புக்காவல்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
கண்டி தெல்தெனியவில் பெண் உடலியல் மருத்துவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் மூவரும் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது கைதான மூவரையும் 48 மணிநேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு நுவரெலியா மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் 25-06-2025அன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நுவரெலியா பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சந்தேக நபர்களை 48 மணிநேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.
இதேவேளை, தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் உடலியல் மருத்துவரின் மரணம், கழுத்து நெரிக்கப்பட்டு செய்யப்பட்ட ஒரு மனிதக் கொலை என்பது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் திகதி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் கார் ஒன்றினுள் இருந்து 33 வயதுடைய ஷ்யாமா தர்ஷனியின் சடலம் மீட்கப்பட்டமை முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த மரணம் தொடர்பில் எழுந்த சந்தேகம் காரணமாக பொலிஸார் பரந்தளவிலான விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், அதன் பலனாக நேற்று முன்தினம் அதிகாலை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் சிறு பிள்ளை ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், சாவகச்சேரி கைதடி பகுதியில் பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போதே, ஷியாமாவின் காதலன் எனக் கூறப்படும் 43 வயதுடைய பிரதான சந்தேகநபரும், கொஸ்கொல்ல ஹொரம்பாவை பகுதியைச் சேர்ந்த அவரது 35 வயதுடைய மனைவியும் வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, குறித்த பிரதான சந்தேகநபர் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ், ரஜவெல்ல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவரும் நுவரெலியா பிராந்திய குற்றவியல் பணியக அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அதனையடுத்து அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விசாரணைகள் தொடரப்பட்டு வருகின்றன.
7 நாட்களாக சந்தேகநபரைத் தேடி, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவிகளுடன் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் பின்னரே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, தான் ஷியாமா தங்கியிருந்த அறைக்குச் சென்ற போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், பயம் காரணமாக சடலத்தை காரில் ஏற்றி தெல்தெனியவிற்கு கொண்டு வந்ததாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





