கணேமுல்ல சஞ்சீவவின் சகா ஆமி உபுல் சுட்டுக்கொலை
ஐஸ் போதைப்பொருள் மற்றும் கைக்குண்டு ஒன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் கடந்த மே மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா, ராகம பகுதியில் இனந்தெரியாதோரால் நேற்று முன்தினம் இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் திட்டமிட்டக்குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் ஆமி உபுல் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஐஸ் போதைப்பொருள் மற்றும் கைக்குண்டு ஒன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆமி உபுல் கடந்த மே மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தத்துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படுவத்த மாவத்தை பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் இனந்தெரியாத தரப்பினரால் இந்தத் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி ஒன்றில் வருகை தந்த அடையாளம் தெரியாத தரப்பினர் இந்தத்துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 45 வயதுடைய படுவத்த பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ சிப்பாய் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
சந்தேக நபர்கள் கைத்துப்பாக்கி ஒன்றை இந்தத் துப்பாக்கப்பிரயோகத்துக்கு பயன்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
திட்டமிட்டக்குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் ''ஆமி உபுல்'' என அழைக்கப்படும் உபுல் அமர ரஞ்சித் என்பவரே சம்பவத்தின் போது சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஐஸ் போதைப்பொருள் மற்றும் கைக்குண்டு ஒன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் கடந்த மே மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆமி உபுல் என்பவர் ''கனேமுல்ல சஞ்ஜீவ'' மற்றும் ''கொண்ட ரஞ்ஜீ'' ஆகியோருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்த ஒருவர் எனவும் எனினும் இடைப்பட்ட காலப்பகுதியில் அவர்களுடன் விலகி தனித்து செயற்பட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் ராகம வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ராகம பொலிஸார் உள்ளிட்ட பொலிஸ் குழுக்கள் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.





