ஐ.நா.சிறப்பு அறிக்கையாளருக்கு அரசாங்கம் பதிலளிப்பு
இலங்கை அரசாங்கம் நீதித்துறை சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான தனது உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
நீபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது, நீதித்துறை சுதந்திரத்துக்கு முரணானது அல்ல. இலங்கை உடன்பட்ட சர்வதேச சமவாயச்சட்ட பொறுப்புக்களுக்கும் எதிரானது அல்ல. இலங்கை அரசாங்கமானது, நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அடிப்படைக் கொள்கைகளை ஏற்று நீதித்துறை சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது என்று ஐ.நா. சிறப்பு அறிக்கையாளருக்கு அனுப்பியுள்ள பதிலில் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சாட்டர்த்வைட் அண்மையில் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் குறித்த சிறப்பு அறிக்கையாளரால் 2026 ஆகஸ்ட் 7 ஆம் திகதியிட்ட தொடர்பாடலில் எழுப்பப்பட்ட கவலைகள் தொடர்பில், குறிப்பாக நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை திருத்துவது உள்ளிட்ட முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பான அரசியலமைப்பு, சட்ட உருவாக்கம் மற்றும் கொள்கை ரீதியான விடயங்களை தெளிவுபடுத்துவதற்கான வாய்ப்பை இலங்கை அரசாங்கம் பாராட்டுகிறது.
அரசியலமைப்பிற்கான 22வது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை அமைப்பின் (திருத்த) சட்டமூலம் ஆகியவை 2026 .08 7 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, 2026 ஆகஸ்ட் 18 ஆம் திகதி பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது (முறையே 65 இலிருந்து 67 ஆகவும், 63 இலிருந்து 65 ஆகவும்) பிரதம நீதியரசரைப் பொறுத்தவரை, ஓய்வுபெறும் வயதானது அவர் 67 வயதை அடையும் திகதி அல்லது பதவிக்கு நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து ஆறு ஆண்டுகள் நிறைவடையும் திகதி என குறிப்பிடுவது.
நீதித்துறை அமைப்பின் (திருத்த) சட்டமூலமானது மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 61 இலிருந்து 63 ஆக உயர்த்த முன்மொழிகிறது மற்றும் ஏனைய அனைத்து நீதிபதிகள் மற்றும் நீதிவான்களின் கட்டாய ஓய்வுபெறும் வயது 62 ஆக இருக்க வேண்டும் எனக்குறிப்பிடுகிறது. மேலும், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் அதிகபட்ச எண்ணிக்கையை 110 இலிருந்து 120 ஆக அதிகரிக்கவும் இச்சட்டமூலம் முன்மொழிகிறது.
மேற்கூறிய சட்டமூலங்கள் அரசியலமைப்பின் 121ஆவது உறுப்புரையின் கீழ் உயர் நீதிமன்றத்தின் அரசியலமைப்பு மறுாய்வுக்கு உட்படுத்தப்படலாம்,மேலும் அரசியலமைப்பால் கட்டாயப்படுத்தப்பட்ட நீதித்துறை மீளாய்வு செயல்முறை நிறைவடைந்த பின்னரே மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேற்கூறிய சட்டமூலங்கள் உயர் நீதிமன்றங்களின் குறிப்பிட்ட உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீடிப்பதற்காகவோ அல்லது உடனடி நிறுவன நோக்கங்களுக்காக நீதித்துறையின் அமைப்பை மாற்றுவதற்காகவோ முன்மொழியப்படவில்லை என்பதை அரசாங்கம் வலியுறுத்துகிறது.
தேங்கிக்கிடக்கும் வழக்குகளின் பாரிய சுமையைக் குறைத்தல், நீதிக்கான அணுகலை மேம்படுத்துதல், மேல்முறையீட்டு அதிகார வரம்பை பிராந்திய அளவில் செயல்படுத்துவதை இலகுவாக்குதல் மற்றும் நீதித்துறை நிபுணத்துவம் மற்றும் நிறுவன அறிவைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் தேவையைக் கருத்தில் கொண்டு, நீதி அமைப்பின் திறனை வலுப்படுத்துவதே இத்திருத்தங்களின் நோக்கமாகும்.
நீதிக்கான அணுகல் என்பது சட்டத்தின் ஆட்சியின் அடிப்படைத் தத்துவமாகும் என்றும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கையின் 2(3) மற்றும் 14 ஆம் உறுப்புரைகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மனித உரிமைகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் பற்றிய சிறப்பு அறிக்கையாளர், இலங்கையர்கள் நீதிமன்றங்களை அணுகுவதையும் அவர்களின் வழக்குகள் சரியான நேரத்தில் விசாரணை செய்யப்படுவதையும் உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார். மேலும் இலங்கையின் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போதும்,இலங்கையிலுள்ள பல்வேறு சட்டப் பிரச்சினைகளைக் கையாளுவதற்கும் நாட்டில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்றும் சிறப்பு அறிக்கையாளர் குறிப்பிட்டிருந்தார்.
போதுமான ஊழியர்களையும் அனுபவமிக்க நீதித்துறை அதிகாரிகளையும் கொண்டிருப்பது நீதிக்கான அணுகலின் இன்றியமையாத அங்கமாகும். இது தொடர்பான அரசாங்கத்தின் பொறுப்புகளை அங்கீகரிக்கும் வகையில்,அரசியலமைப்பின் 146 ஆவது உறுப்புரையின் படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம்,பிராந்திய அமர்வுகளை நடத்த நீதிமன்றத்தை அனுமதிப்பதே இந்த தற்போதைய சீர்திருத்த செயல்முறையின் ஒரு நோக்கமாகும்.
நீதித்துறை அமைப்பின் (திருத்த) சட்டமூலமானது உயர் நீதிமன்றங்களில் மட்டுமல்லாது அனைத்து நிலைகளிலும் நீதித்துறை திறனை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
குறித்த சட்டமூலமானது தடுத்து வைப்பதற்கான தனிப்பட்ட நீதித்துறை அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு நிறைவேற்று அதிகாரத்திற்கு எந்த அதிகாரத்தையும் உருவாக்கவில்லை. இந்த சீர்திருத்தங்கள் நீதி அமைப்பின் செயல்திறன் மற்றும் திறனை ஒட்டுமொத்தமாக மேம்படுத்துவதற்கு உகந்ததாக இருக்கும்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், அவ்வாறு வயதை அதிகரிப்பது நீதிக்கான அணுகல் மற்றும் நீதி நிர்வாகத்தின் திறனை மேம்படுத்துவதற்கான முன்மொழிவின் ஒரு பகுதியாகக் கருதப்பட வேண்டும். இதற்கு நீதித்துறை அனுபவம் மற்றும் தொடர்ச்சியை தகுந்த அளவில் உறுதிப்படுத்துவதும் தக்கவைத்துக்கொள்வதும் அவசியமாகிறது.
முன்மொழியப்பட்ட திருத்தங்கள்,2026 ஜூலையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் மூலம் முறைப்படி தொடங்கப்பட்ட ஒரு பரந்த நீதித்துறை சீர்திருத்த செயல்முறையின் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கூறுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. கூறப்பட்ட பத்திரத்தை பரிசீலித்த பின்னர், அமைச்சரவை முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சருக்கு அறிவுறுத்தியது.
முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் முறையான நீதி நிர்வாகம், நீதிக்கான மக்களின் அணுகலை முன்னெடுத்தல், நீதித்துறை நிபுணத்துவத்தைப் பேணுதல் மற்றும் நிறுவனத் தொடர்ச்சியை உறுதிப்படுத்துதல் போன்ற சட்டபூர்வமான குறிக்கோள்களால் அவசியமாக்கப்படுகின்றன.
அரசியலமைப்பினால் நிர்ணயிக்கப்பட்ட ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதை உள்ளடக்கிய முன்மொழியப்பட்ட திருத்தங்கள், அரசியலமைப்பின் 107ஆவது உறுப்புரையின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பதவிக்கால பாதுகாப்பிற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. சட்டபூர்வமான குறிக்கோள்களை அடைவதற்காக ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது, நீதித்துறை சுதந்திரத்திற்கு அத்தியாவசியமான பதவிக்கால பாதுகாப்பிற்கு முரணானது அல்ல.
பதவிக்காலப் பாதுகாப்பை நீதித்துறை சுதந்திரத்தின் ஒரு முக்கிய அங்கமாக அடையாளப்படுத்துகிறது மற்றும் கட்டாய ஓய்வுபெறும் வயது அல்லது பதவிக் காலம் அதிகரிக்கப்படுவதைத் தடுப்பதென வரையறுக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், தகுந்த சட்ட நடைமுறையின்படி கட்டாய ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது சர்வதேச சமவாய சட்டத்தின் கீழ் இலங்கையின் பொறுப்புகளுக்கு முரணானது அல்ல.
நீதித்துறை சுதந்திரத்திற்குப் பொருந்தும் சிறந்த நடைமுறைகள் மற்றும் தரநிலைகளைக் குறிப்பிடும் பிற ஆவணங்களை ஆய்வு செய்வதும், சட்டபூர்வமாக கட்டாயப்படுத்தப்பட்ட நடைமுறைக்கு இணங்க நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதைத் திருத்துவது நீதித்துறை சுதந்திரத்திற்கு முரணானது அல்ல.
நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அடிப்படைக் கொள்கைகள் கட்டாய ஓய்வுபெறும் வயது அல்லது பதவிக்காலம் முடியும் வரை உத்தரவாதம் அளிக்கப்பட்ட பதவிக்காலத்தின் மூலம் நீதித்துறை சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால், அந்த அடிப்படைக் கொள்கைகள் அரசுகள் அத்தகைய கட்டாய ஓய்வுபெறும் வயது அல்லது பதவிக்காலத்தைத் திருத்துவதைத் தடுக்கவில்லை, அல்லது குறிப்பிட்ட ஓய்வுபெறும் வயதை நிர்ணயிக்கவும் இல்லை.
தற்போதைய நீதிபதிகளை தக்கவைத்துக்கொள்வதற்காக இந்த திருத்தங்கள் கொண்டுவரப்படவில்லை என்பதை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்துகிறது. மாறாக,உத்தேசிக்கப்பட்டுள்ள செயற்பாட்டு விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்க நீதித்துறைக்கு தேவையான திறனும் அனுபவமும் இருப்பதை உறுதி செய்வதற்கே இதுகொண்டுவரப்படுகிறது.
எனவே, முன்மொழியப்பட்ட திருத்தங்களின் பின்னணியில் தற்போதைய நீதிபதிகளை உள்ளடக்குவது நியாயமானது, பகுத்தறிவுள்ளது மற்றும் நீதித்துறையின் செயல்பாட்டில் நிர்வாக அல்லது சட்டவாக்கத் துறைகளின் தலையீட்டைத் தடுப்பதற்கான ஒரு பாதுகாப்பாகும்.
பரிசீலனையில் உள்ள சட்டமூலங்கள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டமியற்றும் நடைமுறைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய, இந்த சட்டமூலங்கள் பொதுமக்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் 121 ஆவது பிரிவின்படி எந்தவொரு குடிமகனும் இதன் அரசியலமைப்புத் தன்மையை உயர்நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்த முடியும்.
எனவே,அரசியலமைப்பின் 121(2) பிரிவின்படி, நீதிமன்றத்தின் தீர்மானம் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் வரை இந்த சட்டமூலத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது. இந்த நடைமுறை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு, சட்டமூலங்களை சவாலுக்கு உட்படுத்தி பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கம் நீதித்துறை சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான தனது உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூலம் ஆகியவை இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சட்டக் கட்டமைப்பின் பின்னணியில் பரிசீலிக்கப்பட வேண்டும்.நீதி நிர்வாகம் சுதந்திரமானது, நடுநிலையானது,திறமையானது மற்றும் அணுகக்கூடியது என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் உள்ளது.





