நிலக்கரி நட்டத்தை ஈடுகட்டவே மின் கட்டணம் அதிகரிப்பு - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
அரசாங்கம் தனது பொறுப்புக்கூறலைத் தவிர்த்து, ஊழலின் நஷ்டத்தை ஈடுகட்ட மக்கள் மீது சுமையை ஏற்றுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மின்சார கட்டண அதிகரிப்புத் தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களின் கருத்துக்களைக் கோரிய போது, ஐக்கிய மக்கள் சக்தியும் அதில் கலந்துகொண்டு, தரமற்ற நிலக்கரி மோசடியின் சுமையை மின் நுகர்வோர் மீது சுமத்த வேண்டாம் எனப் பல முன்மொழிவுகளை முன்வைத்திருந்தது. எனினும், அந்த எதிர்ப்புகளையும் மீறி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் இணைந்து 18 சதவீத மின் கட்டண அதிகரிப்புப் பரிந்துரையை நடைமுறைப்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வெளியிட்டார்.
விசேட கூற்றொன்றை 09-05-2026 அன்று வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்தக் கூற்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த மின்கட்டண அதிகரிப்பு என்பது வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் இருந்து அரசாங்கம் கப்பம் வாங்குவதற்கு ஒப்பானதாகும். 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோர், அதாவது நடுத்தர வர்க்கத்தினர், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோரே இந்த மின்கட்டண அதிகரிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தரமற்ற நிலக்கரித் திட்டத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டவே அரசாங்கம் இந்த 18 சதவீதக் கட்டண உயர்வை மேற்கொண்டுள்ளது.
தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்யும் போது எதிர்க்கட்சிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அவை தரமற்றவை அல்ல என அரசாங்கம் முதலில் கூறியது. பின்னர், நிலக்கரி தரமற்றதாக இருந்தாலும் அதில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்தது. தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் மின் உற்பத்தி குறைந்ததன் காரணமாக, மாற்று வழியான எரிபொருள் மின் உற்பத்தி நிலையங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மின் உற்பத்திச் செலவு அதிகரித்தது. இறுதியில், இந்த ஊழலின் நஷ்டத்தையும் சுமையையும் நடுத்தர வர்க்கத்தினர், வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மீதே அரசாங்கம் சுமத்தியுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு 52 சதவீத பங்களிப்பை வழங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்கள் கூட இந்த ஊழல் நிலக்கரி வர்த்தகத்தின் நஷ்டத்தை இன்று அனுபவித்து வருகிறார்கள். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்ட அரசாங்கம் ஒன்றை மக்கள் ஆட்சிக்குக் கொண்டு வந்தது, இவ்வாறான ஊழல் நிறைந்த திட்டங்களைச் செயல்படுத்தி, அதன் சுமையை மக்கள் மீது சுமத்துவதற்காக அல்ல. அரசாங்கத்தின் இந்த மின்கட்டண அதிகரிப்பானது முற்றிலும் அநீதியான செயலாகும்.
இந்த நஷ்டத்தை மக்களிடமிருந்து அல்லாமல், தரமற்ற நிலக்கரியை விநியோகித்த தரப்பினரிடமிருந்தே அரசாங்கம் ஈடு செய்ய வேண்டும். அரசாங்கம் தனது பொறுப்புக்கூறலைத் தவிர்த்து, ஊழலின் நஷ்டத்தை ஈடுகட்ட மக்கள் மீது சுமையை ஏற்றுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த அதிகரித்த மின்கட்டணம் உடனடியாக குறைக்கப்பட வேண்டும். இல்லையெனில், நாட்டுக்கு வரவிருக்கும் வெளிநாட்டு முதலீடுகள் கூட நாட்டை விட்டு வெளியேறிவிடும்.
நாம் செய்ய வேண்டியது நேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதே தவிர, அவற்றை நாட்டை விட்டு விரட்டுவது அல்ல. இவ்வாறான மின்கட்டண அதிகரிப்பு காரணமாக முதலீட்டாளர்கள் ஏனைய நாடுகளை நோக்கிச் சென்றுவிடுவார்கள். எனவே, அரசாங்கத்தின் இந்த மக்கள் விரோதக் கொள்கையைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றோம் என்றுள்ளது.





