விக்டோரியா நீர்த்தேக்கம் நீரை ஆபத்தான அளவுக்கு குறைத்து மின்சாரம் உற்பத்தி - முன்னிலை சோசலிசக் கட்சி
குறிப்பிட்ட பிரதேசத்திலேயே நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பங்கு வகிக்கும் போய் முதலீட்டு வலயங்களில் உள்ள தொழிற்சாலைகள் காணப்படுகின்றன.
இலங்கையில் நிலவும் மின்சார நெருக்கடியை தற்காலிகமாக சமாளிப்பதற்காக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் மட்டத்தை ஆபத்தான நிலைக்கு குறைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
இது குறித்து 15-04-2026 அன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்ற ஊழல் மற்றும் நிர்வாக தவறுகளால் ஏற்பட்ட மின்சாரத் தட்டுப்பாட்டை மறைக்க அரசாங்கம் தற்போது நீர்த்தேக்கங்களில் காணப்படும் நீரை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி வருகிறது. விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் மட்டத்தை பெருமளவு குறைப்பதன் மூலம் எதிர்காலத்தில் விவசாய நடவடிக்கைகளுக்கான நீர்ப்பாசன வசதி கடுமையாகப் பாதிக்கப்படும். அத்துடன், குடிநீர் மற்றும் வேறு தேவைகளுக்கான நீர் பாவனையும் பாதிப்படையும்.
தற்போது நிலவும் வறட்சியான காலநிலையை கருத்தில் கொள்ளாது மார்ச் மாத இறுதியில் எடுக்கப்பட்ட இந்தத் தன்னிச்சையான தீர்மானம் எதிர்வரும் பெரும்போக விவசாயத்தையும் நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும்.
விக்டோரியா நீர்த்தேக்கதின் நீர் மட்டத்தை கடல் மட்டத்திலிருந் 422 மீற்றர் அளவில் பேண வேண்டியது குடிநீர் விநியோகத்துக்கு அவசியமாகும். இருப்பினும் மின் உற்பத்திக்காக சுமார் 330 மில்லியன் கன மீட்டர் நீரை வெளியேற்றும் தீர்மானத்தின் நேரடி விளைவாக பலகொல்ல நீர் சுத்திகரிப்பு நிலையம் ஏற்கனவே செயலிழந்துள்ளதுடன், இதனால் குண்டசாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 17,000 குடிநீர் இணைப்புகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 12,000 கன மீட்டர் நீர் தேவைப்படும் நிலையில் அரசாங்கத்தால் வெறும் 500 கன மீட்டர் நீரை மட்டுமே பவுசர்கள் மூலம் வழங்க முடியம். எனவே தற்போது போதிய நீர் இன்றி அப்பிரதேச மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பிட்ட பிரதேசத்திலேயே நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பங்கு வகிக்கும் போய் முதலீட்டு வலயங்களில் உள்ள தொழிற்சாலைகள் காணப்படுகின்றன. இவ்வாறு நீர் கட்டுப்பாட்டினால் இத்தொழிற்சாலைகளை மூடப்படும் நிலையும் ஏற்படும்.
இவ்வாறு தவறான மின்சாரக் கொள்கையினால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டுவதற்காக விவசாயிகளையும், பொதுமக்களையும் உட்புகுத்த வேண்டாம். விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வெளியேற்றுவதை உடனடியாக கட்டுபடுத்த வேண்டும்.
இல்லையேனில் அரசியின் விலை உயர்வு மற்றும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும். அரசாங்கம் தனது தன்னிச்சையான முடிவுகளைக் கைவிட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், விவசாயம் மற்றும் சரியான அரசியல் வழிகாட்டலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.





