மீளமைப்பு நடவடிக்கைகளில் அரசாங்கம் பாரிய தோல்வி: மக்கள் தொழில் வல்லுநர் மையம் குற்றச்சாட்டு
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறு வர்த்தகர்களில் 70 சதவீதமானோர் பதிவு செய்யப்படாத வர்த்தக நிலையங்களை நடத்துபவர்கள். அவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கத்திடம் எந்தவொரு முறையான திட்டமும் இல்லை.
கடந்த நவம்பர் இறுதியில் நாட்டைத் தாக்கிய தித்வா சூறாவளி அனர்த்தத்திற்குப் பின்னரான மீளமைப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளில் அரசாங்கம் பாரிய தோல்வியடைந்துள்ளதாக மக்கள் தொழில் வல்லுநர் மையம் குற்றம் சுமத்தியுள்ளது.
அனர்த்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மலையகத் தமிழ் மக்கள், அரசாங்கத்தினால் இன்றும் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே நடத்தப்படுவதாக அந்த மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 200 வருடங்களாக இந்நாட்டில் வாழும் மலையகத் தமிழ் மக்கள் பாரிய அடக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். சூறாவளி மற்றும் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவுகளினால் லயன் குடியிருப்புகளே அதிகளவில் பாதிக்கப்பட்டன. இந்த அனர்த்தத்தையாவது வாய்ப்பாகக் கொண்டு அவர்களுக்கு முறையான நிவாரணங்களை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இன்றும் புறக்கணிக்கப்படுவதாக மக்கள் தொழில் வல்லுநர் மையத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் வைத்தியர் கிஷாந்த தசநாயக்க கோரிக்கை விடுத்தார்.
கொழும்பு நுகேகொடையில் 24-01-2026 அன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில், தித்வா சூறாவளி அனர்த்தம் என்பது இந்நாட்டின் ஆட்சியாளர்களுக்குக் கிடைத்த ஒரு பொற்கால வாய்ப்பாகும். இந்த வறிய சூழலிலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் எவ்வித பேதமுமின்றி ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டதை நாம் கண்டோம். அரசாங்கத்திற்கு உண்மையான தேவை இருந்திருந்தால், இந்த மக்கள் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் நிலவும் இனங்களுக்கிடையிலான கசப்புணர்வுகளை நீக்கி, தேசிய ஒருமைப்பாட்டிற்கான பாதையைத் திறந்திருக்க முடியும். ஆனால் அரசாங்கம் அந்த வாய்ப்பை திட்டமிட்டுத் தவறவிட்டுள்ளது.
மாத்தளை, பதுளை, கண்டி, நுவரெலியா மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன. இங்கேயே அதிகளவான மலையக மக்கள் வாழ்கின்றனர். நில உரிமையோ, முறையான வீட்டு உரிமையோ அல்லது வாழ்வாதாரத்திற்கான போதிய ஊதியமோ இல்லாத நிலையில், இவர்கள் இன்றும் தமது வாழ்க்கையைத் தோட்டத் துரைமார்களிடமே ஒப்படைத்துள்ளனர். இவர்களுக்கு நில உரிமை இல்லாத காரணத்தால், வீடுகளை இழந்தவர்களுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள 50 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியாத சிக்கல் நிலவுகிறது.
கேகாலை மாவட்டம் அரணாயக்க பகுதியில் தோத்தலோயா பிரதேசத்தில் சுமார் 14 கிலோமீற்றர் நீளமுள்ள வீதி முற்றாகத் தாழ்ந்து போயுள்ளது. இதனால் 200 பாடசாலை மாணவர்கள் உட்பட 6000-க்கும் மேற்பட்ட மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர். அனர்த்தத்தின் போது தோட்டத் தொழிற்சாலையில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களை, தற்போது தொழிற்சாலைப் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக எவ்விதப் பாதுகாப்புமின்றி மீண்டும் அதே அபாய வலயத்திற்குச் செல்லுமாறு அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இப்பகுதியை சிவப்பு வலய அபாய பகுதியாக அறிவித்துள்ளது. இவ்வாறான நிலையில், போலியான ஆவணங்களைக் காட்டி மக்களை மீண்டும் அபாய வலயத்தில் குடியேற்ற முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. மழை பெய்யும்போது வெளியேறவும், நின்றவுடன் மீண்டும் வரவும் இவர்கள் என்ன நாடோடிகளா?
இலங்கையின் கடன் ஒப்பந்தங்களின்படி, பாரிய இயற்கை அனர்த்தங்களின் போது கடனை மீளாய்வு செய்ய இடமுண்டு. நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேசப் பொருளாதார நிபுணர்கள் கையொப்பமிட்டு இதற்கான கோரிக்கையை விடுத்தும், அரசாங்கம் அந்த இராஜதந்திர வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல், துல்கிரிய பகுதியில் மண் அகழ்வினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் கூட இன்னும் முழுமையாக மீட்கப்படவில்லை.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறு வர்த்தகர்களில் 70 சதவீதமானோர் பதிவு செய்யப்படாத வர்த்தக நிலையங்களை நடத்துபவர்கள். அவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கத்திடம் எந்தவொரு முறையான திட்டமும் இல்லை. சேதமடைந்த பாடசாலைகள் மற்றும் வீதிகள் இன்னமும் தற்காலிகமான முறையிலேயே சீரமைக்கப்பட்டுள்ளன. ரம்பொடை நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள வீதி போன்ற முக்கிய பாதைகள் கூட இன்னும் ஒரு வழிப்பாதையாகவே காணப்படுகின்றன.
எனவே, அரசாங்கம் உடனடியாகத் தனது நிர்வாக மற்றும் கொள்கை ரீதியான பலவீனங்களை இனங்கண்டு, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி நீதியை வழங்க முன்வர வேண்டும். இதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க மக்கள் தொழில் வல்லுநர் மையம் தயாராக இருப்பதாக வைத்தியர் கிஷாந்த தசநாயக்க மேலும் வலியுறுத்தினார்.





