கைத்தொழில் அபிவிருத்திக்காக காணிகளை விடுவிப்பதை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு
இதுவரை விடுவிக்கப்படாத கைத்தொழில் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட காணிகளை துரிதமாக விடுவிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக உற்பத்தித் துறையின் வினைத்திறன், ஒருங்கிணைப்பு மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்துதல் மற்றும் அந்த முயற்சிகளுடன் தொடர்புடைய சவால்களை எதிர்கொள்வது குறித்து அப்பொழுது கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரை வலுவூட்டுவதற்கான அரசாங்கம் தலைமையிலான ஆரம்ப முதலீடுகள் மற்றும் முறையான விதிமுறைகள், முதலீட்டு வலயங்களுக்குள் உள்ளூர் சிறு அளவிலான கைத்தொழில்களை நிறுவுதல் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் எதிர்கொள்ளும் வணிக கடன்கள் தொடர்பான சவால்கள் ஆகியவை முக்கிய தலைப்புகளில் அடங்கும்.
இதுவரை விடுவிக்கப்படாத கைத்தொழில் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட காணிகளை துரிதமாக விடுவிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
உள்நாட்டு கைத்தொழில்களை வலுப்படுத்துவதற்காக இறக்குமதி கட்டுப்பாடுகளை பேணுதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல், நிர்மாணக் கைத்தொழில் கொள்வனவில் உள்ளூர் வழங்குநர்களுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கு இரத்தினக்கல் மற்றும் ஆபரண துறைகளின் முழுமையான பங்களிப்பை உறுதிப்படுத்துவதற்காக அவற்றில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்தல் ஆகியவை குறித்து மேலும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
இரத்தினக்கல் மற்றும் ஆபரண கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக சுற்றுலாப் பயணிகளுக்கான வரிச்சலுகைகளைத் துரிதமாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.





