வளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் - அருண் ஹேமசந்திரா
நிலையான அபிவிருத்தி என்பது சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மாத்திரம் மட்டுப்படுத்தப்படுவதில்லை.
நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இயற்கை வளங்களை பொறுப்புடன் முகாமைத்துவம் செய்வதுடன், நடைமுறை முதலீடுகள், தொழில்நுட்ப புத்தாக்கங்கள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை முன்னெடுக்க வேண்டும் என வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா வலியுறுத்தினார்.
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் 19-10-2026 அன்று நடைபெற்ற தெற்காசியாவுக்கான வட்டப் பொருளாதாரம் தொடர்பான பிராந்திய மன்றத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் இம்மன்றத்தில் கலந்துகொண்டனர்..
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இலங்கை நிலையான வள முகாமைத்துவத்தில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. நாட்டின் பண்டைய குளங்களின் தொடரமைப்பு முறைமை இதற்கான முக்கியமான எடுத்துக்காட்டாகும். இயற்கை வளங்களை திறமையாக பயன்படுத்தி, அவற்றை பாதுகாத்து வந்த இந்த பாரம்பரியத்தை தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகும்.
இந்த வரலாற்று மரபை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய அரசாங்கம் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புகள், 'க்ளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்தி மற்றும் பொருளாதார மீள்திறனை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
மத்திய கிழக்கு நெருக்கடி, தித்வா சூறாவளி மற்றும் இயற்கை வளங்கள் மீது அதிகரித்து வரும் அழுத்தம் ஆகியவை எரிசக்தி பாதுகாப்பு, வளங்களை திறமையாகப் பயன்படுத்துதல் மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மேலும் வெளிப்படுத்தியுள்ளன.
உலகளாவிய மற்றும் பிராந்திய ரீதியில் ஏற்படும் நெருக்கடிகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்துடன் எரிசக்தி பாதுகாப்பும் வள முகாமைத்துவமும் எந்தளவு நெருக்கமாக தொடர்புபட்டுள்ளன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. எனவே, இயற்கை வளங்களின் பயன்பாட்டை திறம்பட நிர்வகிப்பதுடன், வளங்களின் வீண்விரயத்தை குறைத்து அவற்றை மீள்பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
வட்டப் பொருளாதாரம் தொடர்பான கலந்துரையாடல்கள் கொள்கை மட்டத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தப்படக்கூடாது. அவை நடைமுறை முதலீடுகள், தொழில்நுட்ப புத்தாக்கங்கள், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகளாக மாற்றப்பட வேண்டும்.
தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி வளங்களை திறமையாக நிர்வகிப்பதற்கான புதிய முறைகளை உருவாக்குவதுடன், வட்டப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதுடன் மக்களுக்கான புதிய வருமான வாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.
தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான பிராந்திய ஒத்துழைப்பு இந்த முயற்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. நாடுகளுக்கு இடையில் தொழில்நுட்பம், அறிவு மற்றும் அனுபவங்களை பரிமாறிக்கொள்வதன் ஊடாக வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்க முடியும்.
இந்த நோக்கத்தை முன்னெடுப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள தெற்காசிய வட்டப் பொருளாதாரக் கட்டமைப்பும் 2026 முதல் 2030 ஆம் ஆண்டு வரையான செயற்றிட்ட வரைபடமும் முக்கியமான நடவடிக்கைகளாகும். இவை தெற்காசிய பிராந்தியத்தில் நிலையான வளப் பயன்பாடு, பொருளாதார மீள்திறன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒருங்கிணைத்து முன்னெடுப்பதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தும்.
நிலையான அபிவிருத்தி என்பது சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மாத்திரம் மட்டுப்படுத்தப்படுவதில்லை. அது வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், வளங்களை பொறுப்புடன் முகாமைத்துவம் செய்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் அனைவரையும் சென்றடைவதை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும்.
எனவே, இலங்கையின் பாரம்பரிய வள முகாமைத்துவ அனுபவங்களை நவீன தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்புடன் இணைத்து எதிர்கால பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும் என்றார்.





