இலங்கை - ரஷ்ய சட்டமா அதிபர்களுக்கு இடையில் விசேட ஒப்பந்தம்
சட்டத்துறை சார்ந்த ஒத்துழைப்புக்கான முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிலும் இரு நாட்டு சட்டமா அதிபர்களும் கைச்சாத்திட்டனர்.
இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள நபர்களையும், அங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத சொத்துக்களையும் மீளப் பெற்றுக்கொள்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்க ரஷ்ய கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க மற்றும் ரஷ்ய சட்டமா அதிபர் அலெக்சாண்டர் குட்சன் ஆகியோருக்கு இடையில் நேற்று வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இச்சந்திப்பில், இருதரப்பு சட்ட ரீதியான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சட்டத்துறை சார்ந்த ஒத்துழைப்புக்கான முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிலும் இரு நாட்டு சட்டமா அதிபர்களும் கைச்சாத்திட்டனர்.
இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் ரஷ்யாவில் தஞ்சமடைந்திருந்தாலோ அல்லது அங்கு நிதி மற்றும் சொத்துக்களை மறைத்து வைத்திருந்தாலோ, குற்றச் செயல்களின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்திற்கு அமைய அவர்களை நாட்டிற்குக் கொண்டு வருவதற்கு தேவையான ஒத்துழைப்பு தொடர்ந்தும் வழங்கப்படும் என ரஷ்ய பிரதம சட்டமா அதிபர் இதன்போது உறுதியளித்தார்.
அத்துடன், நீதித்துறை சார்ந்த விடயங்களில் இலங்கை வழங்கி வரும் ஒத்துழைப்பிற்கும் அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். இச்சந்திப்பில் ரஷ்ய கூட்டமைப்பின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.





